Tuesday, 6 March 2012

சூப்பர் சிங்கர்!!!

சுத்த சுதி.
அருமையான குரல் வலம்.
சரண் உனக்கு மகனாய்
பிறந்தது, நீ செய்த
புண்ணியம் என்பர்,
என் உறவினர்களும்,
நண்பர்களும்.

பல முறை யோசித்தபின்,
நானும் என் மனைவியும்
முடிவுசெய்தோம்.
சரணை சூப்பர் சிங்கர்
போட்டிக்கு அனுப்ப.

அலை கடலென
திரண்டிருந்தது கூட்டம்.
ஆர்பரிக்கும் உற்சாகம்.
எப்படியோ பதிவு செய்து
உள்ளே சென்றோம்.

என் ஏழு வயது மகனின்
முதல் பாட்டு.
பாடக் கேட்ட நடுவர்கள்
எழுந்து நின்று கைதட்டினர்.
தேர்வும் செய்தனர்.

எங்களின் மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை.
சரணும் ஆகாயத்தில் பறந்தான்.

முதல் சுற்றுக்கு
முந்நூறு பேர் தேர்வானர்.

இவனும் நேரம் கிடைக்கும்
போதெல்லாம் பாடி பக்குவப் பட்டான்.

முதல் சுற்றிலும்
பார்த்தவரையும், பங்கேற்றவரையும்
வாய் பிளக்க வைத்தான்.
விளைவு இரண்டாம் சுற்றுக்கு
தகுதி பெற்றான்.

நிகழ்ச்சி இயக்குனரோ
எங்களை அழைத்து குரல்வல
நிபுணரிடம் அறிமுகப்படுத்தினார்.
எங்கள் கணங்களில்
ஆனந்தக் கண்ணீர்.

அடுத்த சுற்றுக்கு
ஒரு மாத அவகாசம் இருக்க.
சரணுக்கு தினமும்
மூன்று மணிநேர பயிற்சி அளித்தனர்.
நன்றாக தேரிவந்தான்.

மூன்றாம் சுற்றிலும்
தேர்வானதால்,
இன்னும் கடுமையான
பயிற்சி.
இதைக் கண்ட பள்ளி
நிர்வாகம் சரணை மேலும்
ஊக்குவிக்க விடுமுறை தந்தது.

நேரத்தை நன்கு பயன் படுத்தி,
பல சுற்றுகள் தேறினான்.
நாங்களும் பிரபலங்கள்
ஆனோம்.

நிகழ்ச்சி தயாரிப்பாளர்
சரணுக்கு மாதம் இருபதாயிரம்
தர ஆரம்பித்தனர்.
மேலும் உடைகளும்,
வாகனமும் தந்து உற்சாகப் படுத்தினர்.

இந்த எட்டு மாதத்தில்
சரண் ஒரு பெரிய
நட்சத்திரமாய் ஜொலித்தான்.
இன்னும் மூன்று தினத்தில்
இறுதிச் சுற்று.

இன்று மதியும்
கோவில் சிறப்பு வழிபாடு
செய்ய காரில் சென்று கொண்டிருந்தோம்.

வழி நடுவில்,
ஒரு பத்து வயது சிறுவன்,
காரை இடை மறித்து,
பொம்மைகள் வாங்கிக் கொள்ள
வற்புறுத்திக் கெஞ்சினான்.

என் மனம் ஏதோ பதை
பதைத்து, கண்ணில் நீர் கட்டி,
ஒரு பொம்மை வாங்கிக் கொண்டு,
அவனை அனுப்பிவைத்தேன்.

ஏன் கண்களில் நீர்
என்று சரண் கேட்டான்.

இந்த பத்து வயதில்,
பள்ளிக்குச் செல்லாமல்,
நண்பர்களோடு விளையாடாமல்,
வேண்டியதை உண்ண முடியாமல்,
விரும்பியதை செய்யவும் முடியாமல்,
ஒரு குழந்தை தொழிலாளியாய்,
கஷ்டப்படும் அவன் விதியை
நினைத்து வருந்தினேன்.
என்றேன்.

அதற்கு சரண்,
அப்பா!
இந்த எட்டு மாதமும்,
நானும் பள்ளிக்குச் செல்லவில்லை,
விருப்பமான சாக்லேட், ஐஸ் கிரீம்,
ஜூஸ் மற்றும் கேக் உண்ணவில்லை,
விரும்பியதை செய்யவுமில்லை,
நண்பர்களோடு விளையாடமில்லை.

அப்படியென்றால் நானும்
குழந்தை தொழிலாளியா?
சொல்லுங்கள்?
என்றான்.

No comments:

Post a Comment