Sunday, 5 September 2010

அன்னாடங் காட்சி

மாருகழி மாசத்துல,
கொங்கணகிரி கட்டுக்குள்ள,
கூர போட்ட குடுச வீடு.

குடுசக்குள்ள கருப்பாயி,
கட்டிக்கிட்ட ராசுக்கவுண்டன்,
பெத்துக்கிட்ட ரெண்டு வயசு தங்கராசு.

கொக்கரக்கோவுன்னு கூவுது,
கொண்ட சேவலு.

எந்திரிச்ச ராசுக்குட்டி,
அக்கட்ட வச்சான்,
ஓலப்பாய.

ஓலபாயி ஓலம்கேட்டு, கவுந்திருந்த
கருப்பாயி, அள்ளி முடிஞ்சா சிண்டு முடிய.

தேக்குசாவுல தண்ணி மொண்டு,
கொப்புளுச்சா நாற வாய.

செங்கபொடிய கையில போட்டு,
இந்தல்ல, அந்தல்ல தேச்சு துப்புணா.

ராசுகுட்டியோ வேப்பன்குச்சிய,
மென்னு துப்பிணான்.

பிரிசனும், பொஞ்சாதியும்,
கக்கிசுக்கு கம்மாயோரம்,
ஒதிங்கினாங்க.

வானம் வெளுத்து போச்சு,
பச்சிகளெல்லாம் பறகிடளாச்சு

பொடக்காலி போயி ரவிக்கை சீள
கழட்டி, மேலுக்கு தண்ணி வாக்கிறா,
தட்டிவச்ச கதவுக்கு பின்னாடி.

ராசுகுட்டியோ  கெணத்தடியில,
குத்தவச்ச வாக்குல குளியல போடுறான்.

மாத்துத்துணி இல்லாம, உடுத்துண
துணிய, ஊறவச்சு, தொவச்சு,
மரத்துல மாட்டி, உடம்புல சுத்தி,
ஒனத்துரா, ஈரத்துணிய.

இனி இவங்க உரையாடல்............

அட கூறுகெட்ட அம்முணி,
நேரமாச்சு வயக்காட்டுக்கு,
என்றகூட வர்றியா? வல்லியா?
சொல்லிப்போடு  அம்புட்டுதான்.

ஏனுங்க மாமோ, எகத்தாளம்
வேணாமுங்க, அவகாசம் கொஞ்சங்
குடுங்க, ஆக்கித்தள்ளி போட்டு
கிளம்பிடுவோம்.

அடுப்படிக்கு போறா கருப்பாயி.....
அரிசியில்ல கலயத்துல,
கா கையி சோழ அரிசி
செதரிகிடக்குது சொம்புக்குள்ள.

பானையில தண்ணி ஊத்தி,
சோளச்சோறு பொங்கி போட்டா.

கொழம்புக்கு வேலி போயி,
சுக்கிட்டி கீரைய கில்லி வந்தா.

வானலியில கீரையிட்டு,
மத்தால கடஞ் செடுத்து,
கல்லுப்பு கொஞ்சம் போட்டு,
எறக்கி வச்சா.

வடிச்செடுத்த சோளச்சோறு,
காவயிறு காங்காதே,
பச்ச கொழந்த பசிகலுதா,
என்ன செய்ய மாமா?

கவுண்டன்கிட்ட காசு வாங்கி,
ரவைக்கு அரிசி சோறு பொங்கி
போட்டு, தங்கராச வயிர
குளிர  வைப்போம்.

நீசுத்தண்ணிய கரச்சுகுடிச்சு,
வயிறு நெறச்சு, பொரபுடுறாங்க
வேல வெட்டிக்கு.

எப்பவும்போல் தங்கராச முத்தம்
கொடுத்த கருப்பாயி,
இடி விழுந்த கரண்டு கம்பம்போல,
ஐயோன்னு கூவிப்போட்டா.

கோவம்கொப்புலுச்ச ராசுகுட்டி,
கெரகும்புடிச்ச கிறுக்கி சிறுக்கி,
என்னாச்சு சொல்லிபோடுன்னான்....

குழந்த மேலு அணாலக் கொதுகிது,
மச்சான். எனக்கு வகுத்த கலக்கி,
வேதியில போற மாதிரி இருக்கு
மச்ச்சான்னா....கருப்பாயி.

கழுத்துல கைய வச்ச ராசுக்குட்டி,
வெடுக்குன்னு எடுத்து,
ஐயையோ புள்ள, இப்படியொரு,
மகராசன் மேல்சூட்டை எந்த
செம்மத்துளையும் பாத்ததில்லியே.....

கம்போண்டருக்கு கூட்டி போவம்,
காச்சல் என்னன்னு  கண்டுபுடிப்போம் மச்சான்.

சுருக்கு பைய தேடிப்பாத்து,
சுருட்டி வச்ச அஞ்சு ரூவா தவிர,
சல்லிக்காசு சாத்தியமில்லைனான்.

ஆயி அப்பன் தவிச்சு கெடக்கையில,
ரோசனை ஒன்னு உதிச்சுது,
ராசுக்குட்டிக்கு.

கருப்பாயி, நான்போயி முக்குகடையில,
மூணு ரூவாய்க்கு மாத்திர வாங்கி,
அதோட பாயி கடையில வரக்காபி
வாங்கியாறேன்.

நீ தங்கராச தட்டிகொடுத்து,
ஊத்தியுடு வாயுக்குள்ள.

வேலைமுடிஞ்சு  வந்து,
காசோடு கம்போண்டுர கண்டுபுடலாம்.

அர மனசோட அம்முணி சரீன்க்ரா,
மாத்திர ஊத்தி கொடுத்து,
வயலுக்கு வரா.

ஆறு மணி நேர வேலையில ஆறாயிரம்
தரம் தங்கராச தர்ப்பணம் பண்றா.

வேல முடிஞ்சு, கூலி வாங்கி, ஓடுறாங்க
ரெண்டுபேரும் தங்கராச தேடி.

கெடச்ச பணம் எம்பது ரூவா, இதுல
செட்டியாருக்கு முப்பது, அரிசி பருப்பு
வாங்க முப்பது, கம்போண்ட்ருக்கு இருபதுன்னு,
கணக்கு போட்டு குடுச வந்தாங்க.

மண்டி போட்டு மவராசன தொட்டு பாத்தா,
சந்தோசம் முகமுழுசும்.
கொண்டாதம்மனுக்கு மொத கும்புடுன்னா.

என்னாச்சு கருப்பாயி?
ஐசா இருக்குது மச்சான், மேலு.
ஐயபடத் தேவையில்லைன்னா...
ராசுகுட்டிக்கும் சந்தோசம்.

கையில கொஞ்சம் கருப்பட்டி எடுத்து,
எழுப்பி விட்டு ஊட்டி பாத்தா,
எழவுமில்ல, உண்ணவுமில்ல,
தட்டிபாத்தா, உலுக்கி பாத்தா,
பிரயோசனமில்ல.

என்னபெத்த ராசா, என்னபெத்த ராசான்னு,
ஒப்பாரி வச்சா, ராசுகுட்டியோ
நாடிபாத்து வெலகி நின்னான்.

சத்தங்கேட்ட  செல்லாத்தா, சுப்பாத்தா,
அவனாசிகார அய்யன், சின்ராசு ஓடிவந்தாங்க,
கருப்பாயிக்கு உசுரு போனத உணர
வச்சாங்க.

அட கொல்லையில போற மச்சான்,
அனாத பொனமாக்கினியே ஆசை
மகராசன. வயசு கூட ஆகிலியே,
வந்த வழி போக வச்சியே.
உனக்கு நல்லசாவு வந்திடுமோ,
காசுவெட்டி போட்டிடுவேன்,
கண்ணிமாறு கோயிலிலேன்னு
மாறடிச்சா.

எம்பது ரூவா வச்சு,
ஈமக்கடன் முடிச்சாங்க.

மறுநாள் காடு சென்று,
வயக்காடு சென்று, விட்ட
வேலையை தொடங்கினாங்க,
 அன்னாடங் காட்சியை அரங்கேற்ற................

2 comments:

  1. First 'Hats Off' for writing poem in KONGU tamil.. A different version of poem.. Enjoyed reading it... It was also interesting to find the meaning for some words said in Kongu tamil...

    You have nicely depicted the day today life of a daily waged person.. Really sorry to see how survival suppress the worth of life (in this case a baby life).. After reading this poem it makes me feel how gifted i am for having such a wonderful life..

    Though there are some many wonderful lines these are heart touching ones for me..

    அட கொல்லையில போற மச்சான்,
    அனாத பொனமாக்கினியே ஆசை
    மகராசன. வயசு கூட ஆகிலியே,
    வந்த வழி போக வச்சியே.

    மறுநாள் காடு சென்று,
    வயக்காடு சென்று, விட்ட

    ReplyDelete
  2. Lakshmi Rathan

    Very nice and touching poem..The entire poem is wonderful..U have got very good command over the language..The words could create deep feeling and realize the situation of the family..The family doesn't have time to moan for the death of their son.. They are forced to continue their daily routine.. How sorrowful..
    Many such things are happening around us which we don't stop by and have a look..

    Thodaruttum ungal kavithai arpanipugal..

    ReplyDelete