Friday, 4 April 2014

ஆதலால் காதல் செய்வீர் !!!!

 
எளிமையாக்குங்கள்!
உங்களின் நேசமானவரின் வாழ்க்கையை - கொஞ்சம் 
எளிமையாக்குங்கள்!
 
ஆதாரம், காரணம், விளக்கம் எதிர்நோக்கும்,
வினோதச் சிறையிலிருந்து
விடுவித்து,
 
உங்களின் இஷ்டமானவரின்,
இஷ்டமான வாழ்க்கையை - வாழும்படி 
எளிமையாக்குங்கள்!
 
வாழ்க்கை எத்தனையோ  முறை உங்களை சூழ்நிலைக் கைதியாய் உள்ளாக்கி இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, அச்சூழ்நிலைகளுள்  ஒன்றே இது. ராமும், சீதாவும் காரின் பின் சீட்டில் அமர்ந்து வர விருப்பப்  பட்டார்கள். இருந்தாலும், அவ்வாறு செய்தால் பாரதியை வெளி உலகம் கார் டிரைவர் என்று நினைக்க வைத்துவிடுமே என்று தயங்கினர். ஆகையால் ராமை பின் சீட்டில் அமரச்செய்து சீதா முன் சீட்டில் வந்தமர்ந்தாள்.
இவ்விருவரும் எங்கோ பிறந்தார்கள், எப்படியோ வளர்ந்தார்கள். சிறுதும் எதிபார்ப்பின்றி எதிர்கொண்டனர். பார்வை பரிமாற்றி, பக்குவமாய் பழகினர். தன்னிலை மறந்த பாசம் பீரிடவே, பார்த்துக்கொள்ளும் தருணத்தை தாமாகவே உருவாக்கினர். ஒருவரை ஒருவர் உண்மையாய் உள்வாங்கினர். உள்ளம் கலந்தனர். உறவாய் மாற உறுதியெடுத்தனர். உலகமறிய மணந்துகொள்ள ஆயத்தமாயினர். இப்படி இனிதே ஆரம்பமாயிற்று இவர்களின் காதல் கதை!

இந்தக் காதல் கிளிகளிடம் திருமணத்திருக்கு முன் சில வார்த்தைகள் பரிமாறிக்கொள்ள பாரதி விரும்பினார். ஆகையால் மூவரும் காரில் ஏறி பிரயாணத்தை தொடங்கினர். இது நெடுந்தூரப் பயணமில்லை என்றாலும், இந்த விவாதம் இவர்களின் நெடுங்கால வாழ்க்கைப் பயணத்திற்கு ஓர் வழிகாட்டியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இரு நல்ல நண்பர்கள், இறுதி மூச்சுள்ளவரை கரம்பற்றி இருக்க நினைப்பதைவிட வேறென்ன தகுதி வேண்டும் திருமணம் செய்துகொள்ள?

 
ராமும், சீதாவும் நண்பர்களாவதற்கு முன்னமே இவ்விருவரும் பாரதிக்கு நெருக்கமே. ராம், தெளிவானவன், திடமானவன், தேர்ந்த பொறுமைசாலி, முதிர்ந்த புத்திசாலி. மிகவும் நியாயமானவன், நல்ல குணாதிசியங்கள் கொண்ட நன்மகன், அன்புள்ளம் கொண்டவன், அயராது உழைப்பவன், முடியாதென்ற வார்த்தை கணவிலும்  நினையாதவன். சீதாவின் குணமோ - பழகியவர்கள் பக்குவப்படுவர், பழக நினைப்பவர்கள் பாசம் கொள்வர். அனைவரையும் அன்பால் அரவணைக்கும் ஆற்றல் கொண்டவள், மயானத்தையும் தாயின் அன்பு மடியாக்கும் சக்தி கொண்டவள், நடனத்திற்கு அழகு சேர்க்கும் இவளது நடனம். இவளின் திறமையைப்  பட்டியலிட்டாள், அது பல பக்கங்கள் கொண்ட படிப்பினை புத்தகமாகிவிடும். இவளுக்கு எதிரியாய் இருக்க நினைப்பவர்கள் கடும் பயிற்சி எடுக்க வேண்டும், இல்லையேல் எளிதில் சிநேகம் கொள்ளச் செய்துவிடுவாள். இந்த இரு அற்புதக் குழந்தைகளுக்கு திருமணம். இவர்களின் திருமண வாழ்க்கை உலகிற்கு உதாரனமாக இருக்கும் என்பது பாரதியின் நம்பிக்கை.
பாரதி காரிலுள்ள சிடி பிளேயரை இசைக்கச் செய்தார், அதில் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி...." என்ற பாடல் ஒலிக்க, மூவரும் மெய் மறந்தனர். பின் சீட்டின் நடுவில் இருக்கும் ராமோ தன் கைகளை விரித்தபடி கொஞ்சம் முன்னுக்கு வந்து இருவரின் தோல்களிலும் தன் கைகளைத் தவழச் செய்தான். அந்தக் கணம் ஒரு தெய்வீக சங்கல்பம் சர்வ சாதாரணமாக அரங்கேறியது. பாடலின் ஜீவன் தேவலோகத்திற்கு இட்டுச் சென்றதால், ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருந்தனர். அன்றாட வாழ்கையில் எத்தனை முறைகள் இதுபோன்ற தெய்வீக சங்கல்பங்கள் நம்மை கடந்து சென்றிருக்கும். ஆனால் ஏதோ காரணங்களால் அவைகளை கவனிக்க மறந்திருக்கிறோம் அல்லது மறுத்திருக்கிறோம். பாடல் முடியும் திருவாயில் சீதா விழித்தெழுந்து அடுத்தபாடல் துடங்கும் முன் பாடலை நிறுத்திவிட்டு, பாரதியிடம்,  நீங்கள் தனியாக செல்லும்போது தான் காரில் பாடல் கேட்பீர்கள், யாரேனும் துணையாய் வரும்போது பெரும்பாலும் உரையாடவும், அவர்களின் கருத்தை உள்வாங்கிக் கொள்ளத்தானே விரும்புவீர்கள், இன்று மட்டும் ஏன் இந்த மாற்றமென்று கேட்டாள்?
இதைக் கேட்ட பாரதி செல்லமாக சீதாவின் கன்னத்தை தட்டியபடி, ராமுக்கு காரில் பாடல் கேட்பது மிகவும் பிடிக்கும் என்பதை அறிவேன், மேலும் இன்றைய தினம் உங்களுக்கானது என்று தொடர்ந்தார். எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை அறியவோ, ஆராயவோ நாம் கூடவில்லை மாறாக, உங்களின் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் புரிந்துகொள்ளப் போகிறோமென்றார். சீதா, நீ யாரையேனும் நேசித்தாள், நீ அவர்களின் விருப்பு, வெறுப்புகளை மதிக்கத் தெரிந்திருக்கவேண்டும். எனக்கு சினிமா பிடிக்கவே பிடிக்காதுதான் ஆனால் என் மனைவிக்கு சினிமா பார்ப்பதில் அலாதி சந்தோசம். நான் என் மனைவியை நேசிக்கும் பட்ச்சத்தில், அவளின் விருப்பங்களில் பங்கேற்று அந்தத் தருணத்தின் விருத்தியை பண்மடன்காகுவேன். அதேபோல் அவளின் வெறுப்புகளில் இருந்து ஒரு கவசமாய் மாறி பேணிக் காப்பேன். இதுபோன்று என் மனைவிக்கு கத்திரிக்காயைப் பார்த்தாலே கதறிக்கொண்டு ஓடுபவள் இன்று கத்திரிக்காயில் கணக்கிலடங்கா வகைகள் செய்து சந்தோஷ வெள்ளத்தில் என்னைக் கதிகலங்கச் செய்கிறாள். ஏன் தெரியுமா? கத்திரிக்காய் எனக்கு மிகவும் விருப்பமானதால் இந்த மாற்றம். நாம் நேசிபவர்களின் விருப்பு, வெறுப்புகளை மதிக்க தெரிந்து கொள்வதே, வாழ்க்கையில் இணைந்து வாழ எடுத்துவைக்கும் முதற்ப்படி.
 
விருப்பு வெறுப்பு மனிதனுக்கு இயற்கையிலே கிடைத்த உரிமை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தனிச்சிறப்பு கொண்டவன் மேலும் தனித்துவத்தோடு வாழ எல்லாத் தகுதியும் பெற்றவன். எப்பொழுது நாம் நேசிபவர்களின் விருப்பு, வெறுப்புகளை மதிக்கப் பழகிக் கொண்டோமோ, அக்கணமே அவர்களின் தனித்துவத்தை கலங்கப்படுதாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். இப்படிச் செய்யும்பொழுது, நமக்கு ஏற்றாற்போல் அவர்களை மாற்றாமல், அணு அளவும் சிதைக்காமல் உள்வாங்கிக் கொள்கிறோம். ஆக சீதா, நான் ராமிடம் வைத்திருக்கும் அன்பானது, அவன் விரும்பியதைச் செய்வதே தவிற, நான் வெறுப்பதை தவிர்ப்பதல்ல 
ராம் தன் கைகளை தோள்களிலிருந்து விலக்கிக் கொண்டு  இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். ராமை  அறிவேன், மறு வினாடியே, "தான் சீதாவின் விருப்பு, வெறுப்புகளை மதிக்கிறேனா? என் நேசம் சுயநலம் தாண்டிய காதலா?" என்ற கேள்விகளை தன்னுள் வினவினான். இது ராமின் வியகத்தக்க குணம். எப்பொழுதுமே முனைப்புடன் தெரிந்துகொண்டதை நடைமுறை படுத்தவே துடியாய் துடிப்பவன்.
இந்தத் தருணத்தில் பாரதி காரை சற்று ஓரமாய் நிறுத்தி சீதாவை பின் சீட்டிற்கு மாறச்சொன்னார். ஏனெனில் தனக்கு ராம் வெகுநேரமாக பின் சீட்டிலிருந்து முன்பக்கமாக, இருவருக்கும் இடையில் முகத்தை சொருகி வருவது வருத்தம் தந்தது. ராமும், சீதாவும் சற்றுத் தயங்கினர். இதைக் கண்ட பாரதி, "என்னைப் பற்றி டிரைவர் என்று தானே நினைப்பார்கள்? அவர்கள் நினைப்பதிலும் என்ன தவறு இருக்க முடியும்? கார் ஒட்டுபவர் ஓட்டுனர் தானே? பிறர் என்ன நினைப்பார்கள் என்பது முக்கியமல்ல, நாம் என்ன நினைக்கிறோம் என்பதே மிக மிக அவசியம்.  நீங்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்வதே எனக்கு சந்தோசத்தை தரும் என்றார். சற்று கூர்ந்து  கவனித்தால், நீ முன்னிருந்து பின்னிருகைக்கு செல்லும் இந்த சிறிய செயல் எனக்கு அளவற்ற ஆனந்தத்தை தருகிறது, அப்படியிருக்க அந்தச் செயலை செய்யாமல் தாமதிப்தால் என்ன பயன்? உடனே சீதா எழுந்த பின் சீட்டிற்கு சென்று பாரதியை பார்த்து, சில சமயங்களில் உங்களின் அன்பு எங்களை மெய் சிலிர்க்க .செய்கிறது, பெரும்பான்மை நேரத்தில் தங்கள் அன்பை கையாளத் தெரியாமல் திகைத்துப் போகிறோம், அல்லவா ராம்?
 
இதற்கு பாரதி, அன்பு கொண்டவர்கள் மீது, அன்பை வெளிப்டுத்த அவர்களின் வாழ்க்கை முறையை சற்று எளிமையாக்க முயற்சிப்பதே அடிப்படையாகும். நீங்கள் யாரையேனும் நேசித்தால், அவர்களின் வாழ்க்கையை சற்று உற்று நோக்கி எங்கெல்லாம் எளிமை படுத்துதல் சாத்தியமோ, அங்கெல்லாம் எளிமைப்படுதுங்கள். அது பிரதான கதவின் மூன்றாவது சாவியை செய்வதாகவும் இருக்கலாம். இதன் மூலம் நான் எப்பொழுது வேண்டுமானாலும் அழைப்பு மணியை அடிக்காமலே, அன்பானவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் விட்டினுள் நுழைய முடியும். இதுவும் ஒருவகையான எளிமைபடுதுதலே. இதேபோல், சரியான போதிய தகவல்களை நம் உறவுகளோடு பகிர்ந்து கொள்ளுதல், எங்கே செல்கிறோம், எங்கே தங்குவோம், எப்போது வருவோம், எப்படி வரும்வோம், இரவுணவிற்கு என்ன வேண்டும் போன்ற அத்தியாவிசய சமாச்சாரங்களைத் தெளிவாக எடுத்துரைப்பத்தின் மூலம் எளிமை படுத்துகிறோம். இதுமட்டுமின்றி, மன்னிப்பை பெற  காத்திருக்காமலும் நன்றியை எதிர்பார்க்காமலும் நாம் நேசிப்பவர்களின் வாழ்க்கையை வெகுவாக எளிமயாக்கலாம். பொருளாகட்டும், போற்றிப் பாடுவதாகட்டும் 
அதனை ஏற்றுக்கொள்வதில் சிறிது தயக்கம் கொண்டவர்கள் நம்முள் பெரும்பாலானோர். ஒரு பந்தத்தில் நுழைந்தவுடம், இதன்மூலம் என்னென்ன பெறமுடியும் என்று நினைப்பதைவிட, என்னென்ன கொடுக்கமுடியும் என்று நினைப்பதே சாலச் சிறந்தது. எனினும், அன்பானவர்கள் நமக்களிப்பதை - பொருளாகட்டும், அன்பாகட்டும், புகழாகட்டும் அதை யதார்த்தத்துடன் பெற்றுக்கொள்கையில், நாம் அந்த அன்பர்களின் வாழ்வை எளிமை எளிமை படுத்துகிறோம்.
 
அதற்குள் கார் ராமின் அடுக்குமாடி குடியிருப்பை அடைந்துவிட்டது. விடைபெறுவதற்கு முன் பாரதி, நாம் நேசிபவர்களிடம் எதற்கெடுத்தாலும் விளக்கம் கேட்கும் வற்புறுத்தலில் இருந்து விடுதலை கொடுத்து, உறவின் கட்டாயங்களை கொஞ்சம் எளிமை படுத்துவது முக்கியமானது. எதைச் செய்வதற்கு முன்னும், பின்னும் விளக்கம் சொல்லிச் சொல்லி விளங்கச் செய்வது மாதிரி கொடுமையான செயல் வேறொன்றுமில்லை. மனிதர்கள் எப்பொழுதுமே சரியானதையே செய்வார்கள் என்று சொல்ல முடியாது, சில நேரங்களில் சிறு தவறுகள் நேரக்கூடும், நேரும். ஆனால், தவறிழைக்கும் பொழுது அவர்மேல் கொண்ட நம்பிக்கை மட்டும் தளர்ந்து விடக்கூடாது, செய்த காரியம் தவறாக அரங்கேறி இருக்கலாமே தவிர, அவர் எண்ணம் எப்போதும் அவ்வாறு உதிதிருக்காது.  நம்பிக்கை இழந்த காதல் நாதியற்றுப் போகும். நம்பகத் தன்மையோடு உள்ள காதலில், செய்தது , செய்யாதது போன்ற எதற்குமே காரணங்கள் எதிர்பார்க்கும் காட்சிக்கே இடமில்லை என்று முடித்தார்.
பின்பு பாரதி  காரை விட்டு இறங்கியதைபோல் ராமும், சீத்தாவும் இறங்கினர். இருவரும் பாரதியை ஆறத் தழுவினர், பிறகு இருவரும் முதல்முறை தழுவதுபோல் இருக்கத் தழுவினர். ராம், சீதாவின் கரத்தை பிடித்தபடி, பாரதியிடம், நான் இவளின் விருப்பு, வெறுப்புகளுக்கு மரியாதை கொடுப்பேன். எந்தெந்த வகையில்ளெல்லாம் இவளின் வாழ்கையை எளிமை படுத்த முடியுமோ, அந்தந்த வகையிலெல்லாம் எளிமை படுத்துவேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் இவளின் செயல்களை வைத்து எண்ணத்தை சந்தேகப் படமாட்டேன், மேலும் எந்தவித விளக்கமும் எதிர்பார்க்க மாட்டேன்.சீத்தாவும் இதே கருத்தைதான் வெளிப்படுத்துவாள் என்று நம்புகிறேன் என்று கூறி முடித்தான்.
சீத்தாவும் ஆம் என்பதுபோல் தலையசைத்து, மனமார்ந்த நன்றி பாரதி என்றும், நீங்கள் காட்ம் அளவற்ற அன்பிற்கு கோடான கோடி நன்றிகள் என்றாள். பாரதி காரில் ஏறி, சீத்தா நேசிபவர்களுக்கு நாம் செய்ய நினைப்பதர்க்கு எல்லையே இல்லை. இன்னும் என்ன செய்யலாம் என்றே கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்போம். இதன் மூலமே நாம் நம் காதலை நேசிபவர்களிடம் வெளிபடுதுகிறோம்.
நீங்கள் உங்களின் திருமணத்தின் மூலம் பலருக்கு வழிகாட்டியாய் அமைய வேண்டுமென்பது என் ஆசை. உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அன்பின் அளவை நீங்கள் அளப்பது இயலாத ஒன்று, வருகிறேன். வாழ்த்துக்கள், நலமாயிருங்கள் என்று காரை  ஓட்ட ஆரம்பித்தார்.
வேகத்தை கூட்டியபடி கார் பறந்து சென்று மறைந்தது. ஆனால் அவரின் அன்பு மட்டும் மறைந்துவிடாமல் எங்கும் வியாபித்திருந்தது.

நான் உமா மகேஷ்வரி பேசுகிறேன்

என் முடிவைக் கண்டு,
தாங்க முடியாத துயரம் கொண்டு,
கண்ணீர் சிந்தும் - என்
தோழர் தோழியர்க்கு,
நன்றி தெரிவிக்க - கண்ணீரையே
காணிக்கையாக்க நினைத்தேன்.

ஆனால் கண்களில் நீரின்றி,
தேகம் அழுகிபோய்,
காய்ந்து கிடந்தேன்.

ஆத்தூரில் பிறந்த,
ஒரு வறுமைக் கோட்டின்மேல்,
தத்தளிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த,
சாதாரணப் பெண் நான்.

ஆசிரியர் மகளானதாள்,
ஆர்வமாய் பயின்றேன்.
பள்ளிக் கல்வி கடந்து,
ராசிபுரத்தில் கல்லூரி அடைந்தேன்.

சாதுர்யம்,
சாமர்த்தியம் அறியாத,
ஒரு சராசரிப் பெண் நான்.

பெரிய கனவுகளோ,
புரட்சிகரமான சிந்தனையோ,
நாட்டு நடப்போ,
இப்படி எதுவும் அறியாத,
அடுப்பங்கறைப் பெண் நான்.

கிடைத்த கல்லூரி படிப்பை,
குறைவின்றி கற்றுத்தேறி,
மிகநல்ல நிறுவனத்தில்
சேர்ந்தேன்.

வேலையில் சேர்ந்த முதல் நாள்,
சொர்க்கத்தில் மிதந்த ஒரு பூரிப்பு.

வானுயர்ந்த கட்டிடம்,
சுத்தமான சுற்றுச்சூழல்,
கண்ணாடிச் சுவர்கள்,
கலர் கலர் பூக்கள்,
பாதையோரம் புல்  விரிப்புகள்,
ஆங்காங்கே நீர் சுனைகள்,
ஆரோக்கியமான காற்று,
சிரித்து சிரித்து பேசிக் கொள்ளும்,
அலுவலர்கள்.

இவையனைத்தும் என்னை
கொஞ்சம் சிலிர்க்க வைத்தது.

என் கனவு,
லட்சியம்,
ஆசை ஒன்றே ஒன்று தான்.
குடும்பக் கடனை அடைப்பது.
அடைத்தபின் பெற்றோரின்
வாழ்வாதாரத்தை சிறிதாவது,
உயர்த்துவது.

மூன்று மாத பயிற்சி காலம்
பக்குவமாய் முடிந்தது.

பயிற்சி பெற்ற என்னை,
பணியில் அமர்த்தினர்.

மாதச் சம்பளத்திலிருந்து,
ஒவ்வொரு காசையும்,
பார்த்து பார்த்து சேமித்தேன்.

அனாவசிய செலவுகளை
அறவே துறந்தேன்.

ஆட்டோவில் செல்வது கூட,
ஆடம்பரச் செலவென்று கருதி,
தவிர்த்தேன்.

நான்கு மாதங்கள்,
நன்றாகவே சென்றது.

சம்பவத்தன்று,
அலுவலக வேலையை
முன்னமே முடித்துவிட்டு,
கேட்டைத் தாண்டினேன்.

இரவு 10:30,
அரசு பேருந்திற்கு அரை
மணி நேரம் காத்திருக்க மனமின்றி,
மெயின் ரோடு செல்ல
இரண்டு கிலோமீட்டர் தூரம்,
கடக்கத் தயாரானேன்.

ஆட்டோவும் அனாவிசையச்
செலவாய் பட்டதால்,
காலார நடந்தேன்.

மங்கிய தெருவிளக்குகள்,
நடை பாதையை மங்கலாய்
காட்டியது.

தலைகுனிந்த படி,
வேகத்தை கூட்டியபடி
நடக்கும்போது.
தீடீரென்று நடைபாதையை
நால்வர் மறைத்தனர்.

திடுக்கிட்டு நிமிர்ந்தேன்,
புரியாத பாஷையில்
பேசத் துடங்கினர்.

ஒன்றும் புரியவில்லை,
உடல் நடுக்கம் கண்டது,
கண்ணீர் கறை புரண்டோடியது,
செய்வதறியாமல்,
ஆ! என்று அழ ஆரம்பித்த என்
வாயை துணி கொண்டு
அடைத்தனர்.

ஒருவன்,
என் கைகளை பின்தள்ளி,
கயிறால் கட்டினான்.

பதட்டத்தில்,
உடலை உதறி உதறி,
துடிக்கிறேன்.

ரோட்டில் குறுக்கும்,
நெடுக்கும் யாருமே இல்லை.

என் ஆசை அலுவலகம் மட்டும்,
அதே பொலிவோடு,
பேரொளி வீற்றிருந்த,
பூதாகார பட்டாம் பூச்சி போல்,
இந்தக் காட்சியை,
கண்கொட்டாமல் பார்த்தபடி,
மௌனித்து இருந்தது.


திகில் திரைபடத்திற்கே,
தாங்காத என்னை,
தர தரவென,
இருட்டிற்குள் இழுத்துச் சென்றனர்.

அதிர்ந்து பேசினாலே,
பயத்தில் சுருங்கி விடும் என்னிடம்,
காட்டுத் தனமாய் கத்துகின்றனர்.

வீட்டில் கூட செல்லப்
பிராணி வளர்த்ததில்லை.
விலங்குகளும் பயமே.

இங்கு வேலைபார்பவர்களும்,
கட்டிடத் தொழிலாளிகளும்,
மனிதர்களென்று எண்ணி இருந்தேன்.

இன்று தான் புரிந்தது,
கொடூரமான விலங்குகளும் வேலை
பார்கிறதென்று.

குறைந்த கூலிக்கு அடிபணிந்தால்,
கட்டிடக் காண்டிராக்டர்கள்,
சிங்கம், புலியைக் கூட,
வேலைக்கு அமர்த்துவார்கள்.

மதி கெட்ட
விலங்குகளைப் போல்,
புதருக்குள் இழுத்துச் சென்றனர்.

ஏதேதோ அரங்கேறியது...............
........................................................
........................................................

இப்போது மெல்ல மெல்ல,
என் உயிர்,
என்னை விட்டு.

என்னைக் கவர்ந்த
பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்த
பல பல பட்டாம் பூச்சி
நிறுவனத்தை விட்டு.

உயர உயர மேலே சென்று,
காற்றில் கரைந்து போனது.

பெரும்பாலானோர்,
தவறு ஏன் மீதே சுமத்துகின்றனர்.
தனியாக சென்றது தவறாம்.

டெல்லியில் தானே
பயங்கரம்!

நான் தமிழ் நாட்டில்,
கலவரமில்லாத பகுதியில்
தானே இருக்கிறேன்,
என்று அப்பாவியாய்
இருந்துவிட்டேன்.

தவறென்றும் உணர்ந்துவிட்டேன்.
மன்னித்து விடுங்கள்.

இனியாவது,
பெண் பணியாளர்களே !
இரவு நேரங்களில்,
தனியாக செல்லாதீர் !!!

மாமிச வெறியர்கள்,
மனித ரூபத்தில்,
எங்கெங்கிலும்,
பறந்து, விரிந்து,
பரவிக் கிடக்கின்றனர்.

மாட்டிக் கொண்டால்,
மயானம் உறுதி !!!

அலுவலகமும்,
அரசாங்கமும் அவரவர்,
கடமையை கண்டிப்பாகச்
செய்வர்.
உன் உயிர் பிரிந்தாகி
விட்டதென்று,
உறுதி செய்த பின்.

ஜாக்கிரதை!!!

முட்டாள்கள் தினம்

மார்ச் 31, இரவு 7:30

மூன்று நண்பர்களோடு,
முக்கோண வடிவில்,
முட்டிக்கொண்டு அமர்ந்து.

சினிமா படம் கொண்ட,
தினத்தந்தி தாழை,
நடுவில் விரித்து வைத்து.

அதிலொரு விஸ்க்கி பாட்டிலை,
வீரமாய் நட்டுவைத்து,
ஆறு சிகரெட் பாக்கெட்டை
அம்சமாய் அடுக்கி வைத்து.

நடுசாம கூத்துக்கு,
தயாரானோம்.

விடிந்தால் என் பிறந்தநாள்,
அதை கொண்டாடி மகிழவே,
இந்த ஏற்பாடு.

எப்பொழுதுமே ஒரே மாதிரி
குடித்து, குடித்து வெறுத்துப்போய்
இருந்தது.

இந்தமுறை புதுவிதமாக,
சிங்கப்பூரில் இருந்து கிடைத்த,
ஒரு போதை வில்லையை,
போட்டுக் குடிக்க முடிவு
செய்தோம்.

இதன் மூலம்,
அதிக போதை,
குறைந்த தலைவலி என்று
பெரும் குடியர்கள் சொல்லி
கேட்டிருக்கிறோம்.

பாசக்கார நண்பர்கள்,
எனக்கும் மட்டும் அதிக
ரௌண்டுகள் தருவதாய்
சொன்னது, என்னை சொர்கத்துக்கு
கூட்டிச் சென்றது.

ஆட்டத்தை ஆரம்பிக்க,
அனைவரும் ஆயித்தமானோம்.

பாட்டில் அடிதட்டி,
முடிதட்டி, மூடி பிடித்து,
கழுத்தை திறுக்கி,
ஒரு போதை வில்லையை,
உள்ளே வீசி எரிந்து,
கதறக் கதற,
கண்ணாடி டம்ப்ளரில்
ஊற்றினான் ரவி.

அனைவரின் முகத்திலும்,
ஆயிரம் வாட்ஸ் குண்டு பல்பு,
கூதூகளித்தது.

சோடா கலந்தார்கள்,
அடுத்தவனின் அளவை அளவிட்டனர்,
கண்களை சுருக்கி,
வாயை குறுக்கி,
முகத்தை இறுக்கி,
சரக்கை அடித்தார்கள்.

பிறகு சைடு டிஸ்சை,
கடித்தார்கள்.
இதேபோல் சில
முறை என் நண்பர்களும்,
பல முறைகள் நானும்,
அடித்து, முடித்து களைத்தோம்.

ஒவ்வொருவரும் தங்கள் சீட்டை,
தேட்ச்சபடி பின்னே சென்று,
சுவரில் ஒட்டிகொண்டனர்.

நானோ ஒரு மர அலமாரியை,
முதுகில் முட்டுக் குடுத்து,
அமர்தேன்.

ஏதோ ஒரு மாற்றும்,
அடிவயிரில் ஏற்பட்டு,
என்னை எழுப்பி விட,
திமுறி எழுந்தேன்.

நின்றேன்,
கண்கள் இருட்டிற்று,
வாய் தானாகவே திறந்தது,
தலை தொங்கிற்று,
கூன்போட்டு குனிந்தேன்,
குபீரென்று ஏதோ கொட்டிற்று.

ஏப்ரல் 1, அதிகாலை 4:30

அமைதி,
மயான அமைதி.

கும் இருட்டு,
கெட்ட வாடை வீசியது,
கைகளில் ஏதோ பச பசவென ஓட்டலானது.

தலை,  இரண்டு துண்டானது போல்
ஒரு வலி. தாங்கமுடியாமல்
துடிக்கிறேன்.

தீடீரென்று,
காது கிழியும் அளவில்,
ஆம்புலன்ஸ் சத்தம்.

பட படவென்று எழுந்து,
நிற்க முடியாமல்,
வழுக்கி, வழுக்கி,
நிற்கிறேன்.

பதறியடித்து,
லைட்டை ஆன் செய்தேன்.

அய்யோ, அய்யய்யோ,
ரூமில் நான் படுதிறந்த,
இடத்தில் மட்டும்,
ரத்தமான ரத்தம்.

தலையில் இருந்து,
ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
உடை முழுதும்,
ரத்த அபிசேகம்.

நான் படுத்திருந்த தலைமாட்டில்,
ஒரு பெரிய காசப்புகடை கத்தி.

கத்தியின் கைபிடியை அலமாரியின்,
இடுக்கில் சிக்கியபடி,
அறுபடும் பகுதி, அண்ணாந்து பார்த்தபடி,
சொருகி இருந்தது.

இன்னொரு கத்தி,
மின்விசிறியில் தூண்டில் மீனாய்,
தொங்கிக் கொண்டிருந்தது.

இரு கத்தியிலும்,
ரத்தம் சொட்டியபடி இருந்தது.

என்ன நடந்தது என்று,
யூகிக்க முடியவில்லை.
உடல் முழுதும் வலியோ வலி.

சற்று உற்றுப் பார்த்தால்,
ஏதோ மூளை போன்ற ஒன்று,
சிதறிக் கிடந்தது.

ஆங்காங்கே சிறு சிறு,
சதைத் துகல்கள் படர்ந்து
கிடந்ததைக் கண்டு
அலற ஆரம்பித்தேன்.

தலையோ நிற்க தடுமாறி,
சரிந்து கொண்டே இருந்தது.

கண்களால் எதுவும் காண
முடியாமல், காப்பாற்ற சொல்லி, 
கெஞ்சி கதறுகிறேன்.

எதுவும் நடக்காததால்,
மௌனமாகி யோசிக்கிறேன்.

யோசித்ததில் புரிந்தது.

ஆம் நான் நேற்று இரவு,
கொலை செய்யப்பட்டுள்ளேன்.

இரவே இறந்துள்ள நான்,
இப்போது ஆவியாக உலவுவதும்
புரிந்தது.

கண்ணீர் பெருக்கெடுத்து,
ஓடுகிறது.
கண்ணீர் கைகளில் பட்டு, பட்டு,
சுயநினைவு திரும்ப,
திரும்பவும் யோசித்தேன்.

ஆவியான என்னால் பார்க்கமுடிகிறது.
தொட முடியுமா?

தொட முடிந்தால்,
நான் ஆவியன்று.

ஆக யாரையேனும்
தொட்டுப் பார்த்து
முடிவு செய்வோம் என்று முடிவெடுத்தேன்.

மெதுவாக நகர்ந்து, நகர்ந்து,
ஓராமாய் இறந்தோ,
அல்லது போதையில் கிடக்கும்,
நண்பரை தொடச் சென்றேன்.

ரவியை,
தொட்டேன், தொட முடிந்தது.

குலுக்கி குலுக்கி பார்த்தேன்,
சடாரென்று இருவரும் எழுந்து,
ஏப்ரல் பூல் என்று கத்த,
நான் பயந்தெலுந்து,
பதறியடித்து,
பின்னோக்கி ஓடி,
ரத்தக் கலர் பெயிண்டில்,
கால் வழுக்கி,
சொருகி இருந்த,
கசாப்பு கடை கத்தியில்,
தொபுக்கடீரென்று தலை பதித்தேன்.

பிலாப்பழம் நடுவாக்கில்
அறுபடுவதுபோல் தலை அறுபட்டு,
மூளை பிளாச் சொலை போல்
பிதுங்கி விழுந்தது.

அடுத்த வினாடியே,
ஆருயிர் நண்பர்கள் அலறி
என் உடல் அருகில் வர,
நானோ நிஜமான ஆவியாகி,
நண்பர்களுக்கு,
ஏப்ரல் பூல் சொல்லிகொண்டே,
ஆகாயத்தில் ஆஸ்தமித்தேன் !!!!

கம கமக்கும் கக்கூஸ் !!!

பளிச்சிடும் உடை,
பக்கத்தில் இழுக்கும் வாசனை.

நெற்றியின் சுருக்கமோ,
நெஞ்சைக் கொள்ளுகிறது.

நெளிந்த புருவம்,
நேர்த்தியான விழிகள்.

சுந்திர மூக்கு,
அடர்ந்த இதழ்கள்.

அம்சமான காதுகள்,
அளவான தேகம்.

அழகோ அழகு.
பரவச நிலையில்,
உச்சம் தொட்டிருந்தபொழுது.....

என்னாங்க,
உங்க உருப்படாத அழக,
கண்ணாடியில உத்துப் பாத்தது போதும்,
உத்தியோகத்துக்கு கிளம்புங்கன்னு
சொன்ன, மின்சார வார்த்தைகள்,
என்னைத் தூக்கி எரிந்தது.......!

வெளிநாட்டில்,
முதன்முறையாக,
ஹோட்டலில் கான்பரன்ஸ்.

பதறியும், சிதறியும்,
நட்சத்திர ஹோட்டலில் நுழைந்தேன்.

பிரமிப்பு.
மயிர்க்கூச்சரிந்து,
முதுகில் ஜலம் வடிய ஆரம்பித்தது.

சிறிதும் காட்டிக்கொள்ளாமல்,
மீட்டிங் ரூமை தேடினேன்.

அங்கும் இங்கும்,
வெள்ளைக் கொக்குகள்,
பரபரப்பின்றி பரந்துகொண்டிருந்தனர்....

ஒருத்தி கூட,
என்னைக் கெளுத்தி மீனாய்,
எண்ணவே இல்லை.

எப்படியோ ரூமை அடைந்து,
கப்பில் வைத்திருந்த கொளகொள பசையை,
புசித்துக் கொண்டே அமர்ந்தேன்.

இனிப்பாய் இருந்ததால்,
அடித்து நொருக்கி,
ஆனந்தமடைந்தேன்.

இனிப்பாய் இருந்தால்,
எலிப் புலுக்கையை கூட,
மிச்சம் வைக்காமல்,
எச்சில் படாமல்,
உணவுக் குழலில் உருட்டிவிடும்,
பிரகஸ்துதி நான்.

என்ன சத்தம்,
வயிற்றுக்குள் கதகளி நடனமா?
காது கொடுத்து கேட்பதற்க்குள்.....

அருகில் இருந்தவர்,
கேட்டுவிட்டார்.
கோபத்தில் மூக்கைப்
பொத்திக்கொண்டார்.

கதகளி பத்திரகாளி ஆவதற்க்குள்,
பதுங்குழியில் பதுங்க எண்ணி,
எழுந்தேன்.....

சுருங்கியிருந்த வயிறு,
சற்று விரிந்ததால்.....
சங்கே முழங்கென்று,
முரசு கொட்டியது...
சபையே ஸ்தம்பித்தது!

செய்வதறியாமல்,
வராத போனை எடுத்து,
அத்திம்பேல் அங்க மணி மூணா?
இங்க எனக்கு ஏழரை...

சொல்லுங்கோ, ஆமாம், ஆமாம்,
மன்னி ஆத்துல மீன்தான்,
சுட்டுன்ட்ருக்கா என்றபடி,
வெளியே வந்தேன்.

அவசரம்,
கட்டுக்கடங்காத களோபரம்.
அணை தகர்த்திடும் அபாயம்.
ஆகையால், அடிப்பிரதக்ஷணம் செய்தேன்.

யோசித்தேன்,
கக்கூசுக்கு ஆங்கிலத்தில்,
என்னவென்று?

யோசனையே,
அடிவயிறு பானையை,
வீங்க வைத்தது.

பானை விரிசல் விட்டால்...?
கார்ப்பெட் விரித்த தரை,
ஜாம் தடவிய பிரெட்
ஆகிவிடும் என்பதால்,
தவிர்த்தேன்.

கண்ணில் பட்ட வெள்ளைப் புறாவிடம்,
அர்ஜெண்ட்! அர்ஜெண்ட் என்றேன்.
ஒரு நம்பரைக் கொடுத்து,
டயல் செய் என்றாள்.

இது என்ன கருமமோ,
கக்கா வந்தாக்கூட ஸ்டார் ஹோட்டலில்,
கால் போட்டு கன்பார்ம் பண்ணவேண்டும் போல....

கடிந்து கொண்டே டயல் செய்தேன்,
அதுவோ ஆம்புலன்ஸ் நம்பர்....!

அடக் கிராதகி!
எனக்கு கக்கூஸ் வேணுமென்று,
செய்கை செய்தேன்,
புரிந்துகொண்டு வழி சொன்னாள்,
ரெஸ்ட்ரூமுக்கு...

வெள்ளைக்காரன் கக்கூசுக்கு ஏன்,
ரெஸ்ட் ரூமுன்னு பேருவட்சானு,
புரியல...

அவள் சொன்ன வழியில்,
படமோ, போர்டோ இல்லை.
சுவரில் எறிந்த பந்தைப் போல்,
திரும்பவும் அவளிடமே வந்தேன்.

அதுவே தான், செல் என்றாள்.
திரும்பவும் ஏமாற்றம்.
இப்போது, வேறு பாதையில் ஓடி,
வேறு ஒருத்தரிடம் வழி  கேட்டேன்,
அவனும் அதுவேதான் என்றான்...

டேய் நீங்க கண்ணாமூச்சி
ரே ரே விளையாட,
நான் தான் கேடச்சேனா,
என்று புலம்பிக் கொண்டே,
அங்கே போய், இருந்த கதவைத்
திறந்தேன்....

பளீரென்று இருந்தது அறை,
வாஷ்பேசின், ஒன்னுக்கு போக வசதியும்
இருந்தது கண்ணில் பட்டு,
பாதி பாரம் குறைந்ததாய் உணர்தேன்....

உள்ளே ஒரு மெல்லிய இசை,
அடப்பாவிகளா, யூரின் போற இடத்தில்,
வயலின் கச்சேரி எதுக்குடா என்று,
கேட்டுக்கொண்டே, ககூசுக்குல்
நுழைந்தேன்......

வெளிச்சம் மிக குறைவு,
ஆங்காங்கே வாசனை மெழுவர்த்திகள்,
ஒரே கம கம வாசனை.

ஆபரேசனுக்கு ஆயத்தமானேன்...
இருக்கும் பாரத்தை,
இறக்கி வைக்க.
உருகி பார்த்தேன்,
இறுக்கி பார்த்தேன்,
குதித்து பார்த்தேன்,
வெறியாகி முறைத்தும் பார்த்தேன்,
ஏனோ வரவே இல்லை...!

என் மனம்,
இந்த மணத்தை,
இந்த இடங்களில் கண்டிராததால்,
மனம் இறங்க மறுத்தது.
ஞாயமாய் பட்டதால்,
பாரத்தை பத்திரப்படுத்தி,
வீடு வந்தடைந்து,
கம கம கக்கூஸில்,
கழட்டி விட்டேன்.....!!