Thursday, 29 March 2012

மண்ணைத்தாண்டி வருவாயா...?

சினிமா தான் என் கனவு.
பல லட்சங்களைத் தொலைத்தேன்,
என் இலட்சியத்தை ஈட்ட.

ஒட்டிய வயிறோடு காய்திருந்தேன்.
ஒரு கம்பெனியிலாவது வாய்ப்பு பெற.
அசிங்கமும், அவமானமே
இறுதியில் மிஞ்சியது.

படம் இயக்க வாய்ப்பில்லாததால்
என் மனமும் இயங்க மறுத்தது.

ஒன்றுமே கைகூடவில்லை.
உள்ளத்தில் தெம்புமில்லை,
ஊக்குவிக்கவும் ஆளில்லை.

உயிர் இருந்தும் பயனில்லை
என்று முடிவெடுத்தது,
தலையை தண்டவாளத்தில் வைத்தேன்.

நெஞ்சின் படபடப்பு அடங்கும் முன்,
தண்டவாளம் துடிதுடிகலானது.
சில நொடிகளில் ரயில்
பாய்ந்தும் சென்றது.

விழுந்து கிடந்த என்னை
தொட்டு தூக்கி விட்டார்.
நான் கண்ட ஒரே
நல்ல நியமான மனிதர் குப்த்தண்ணன்.
என் விருப்பம் அறிந்தவர்
படம் எடுக்க பணம் தந்தார்.

என் கதையை கேட்டு
சொர்க்கம் சென்று வந்தார்.
சொக்கியும் போனார்.

கதைக்கு கச்சிதமான
நாயகி நடிகை சௌதர்யாவை
ஒப்பந்தம் செய்தும் தந்தார்.

ரணகளப் படுத்தும் பாத்திரத்தை
ரகுவரனே ஏற்று நடிக்க வைத்தார்.

கதாநாயகன் மட்டும் கடைசிவரை
சிக்கவில்லை.
தயங்கி தயங்கி ஒரு பெரிய
நட்சத்திரத்தின் பெயரை
குப்த்தண்ணன் காதில் ஓதினேன்.

முகம் வெயர்த்து முதலாளியிடம்
இட்டுச் சென்றார்.
மொரட்டு தடித்த பணக்கார தர்மராஜா,
அவர் முதலாளி.

நடிகர் பெயரை கேட்டுக்கொண்டு
காற்றிலே கணக்கு போட்டார்.
பட்ஜெட் இடிக்குமோ என்று
யோசித்தார் போலும்.

சில நொடியிலே தர்மன்,
இரு மாதங்கள் காத்திருந்தால்
அவர் கிடைப்பார் என்றார்.

சரி என்று மற்ற பகுதியை
படமாக்க ஆரம்பித்தோம்.
படம் நன்கும் வளர்ந்து வந்தது.

நானும் குப்த்தண்ணனும்,
இரண்டு மாதம் கழித்து
சரியாக வெள்ளிகிழமை 2 ; 30 க்கு
சொன்னபடி அண்ணா சாலை
சென்று கதாநாயகனுக்காக காத்திருந்தோம்.

திடீரென்று ஒரு வெள்ளை
BMW காரை ஒரு தண்ணி லாரி
இடித்து எரிந்தது.

காரிலிருந்தவர் தூக்கி எறியப் பட்டார்.
அருகில் சென்று பார்த்தால்,
ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடக்கும்
அந்த பெரிய நட்சத்திரம்.

அதிர்ச்சியில் என் கெட்ட
நேரத்தை நொந்து கத்தினேன்.
யாரைவைத்து இயக்குவது என்று
குப்த்தண்ணன் இடம் கேட்டேன்.

இவர் தான் நம் படத்தின்
நாயகன் என்றார் குப்த்தண்ணன்.

ஒன்றும் புரியாமல்,
செத்தவரை வைத்து எப்படி இயக்குவது
என்றேன்.

அதற்கு குப்த்தண்ணன்,
செத்தவனே படத்தை இயக்கும் போது,
செத்தவன் நடிக்க முடியாதா?
என்றார்.

Wednesday, 21 March 2012

பொங்கப் பாண இட்லி.......


கொண்ட சேவல் ஒன்னு
குடுச மேல நின்னுகிட்டு,
குய்யோ முறையோன்னு கூவுது.

செங்கப் பொடிய செதரவிட்ட
மாதிரி, செவந்து கிடக்குது
வானம்.

பக்கத்து குடுச ராமாத்தா
வாசத் தொலிக்கிற சத்தங்கேட்டு,
ரணகளப் பட்டு எழுந்திரிச்சா
ராக்காயி.

விடிஞ்சு போன சேதிய
தம் புருஷன் காளியப்பனுக்கு,
காலால உதச்சு உணரவச்சா.

ஆறு வயசு ராசுக்குட்டியும்
ஆவேசத்துல திமிறி எழுந்து,
ஆத்தா இட்லி! ஆத்தா இட்லின்னு!
ஆர்பரிச்சான்.

அட எடுபட்ட கிறுக்கா.
உன்ன நான் அவுதியல
பெத்தேனோ?
பொழுது விடிஞ்சு இன்னும்
கக்கிசு கூட போகிலியே,
அதுக்குள்ள உன் வகுத்துக்கு
தீணி கேக்குதோன்னு,
ராக்காயி கண்டிஞ்சு உலுந்தா.

இதகேட்ட நம்ம பய,
இடுக்குல இருந்த ஈரல
துண்ட, கட்டவெரலுல சுத்தி,
வாயுக்குள்ள முட்டு குடுத்தான்.

பொங்கலோ பொங்கல்ன்னு
ஊரு சனம் கூவும் சத்தம்,
காளியப்பன் காத கிழிக்க.
கமுக்கமா ராகாயி காதுல
பொங்க அரிசியும், வெள்ளம்
வாங்க காசு இல்லன்னான்.

கூடவே ஈடு ஈடா இட்லி சுட்டு
நம்ம குட்டி மவராசன
குசிப் படுத்துன்னு சொல்லிப் போட்டான்.

இதக் கேட்ட ராக்காயி,
உண்டற லட்சணம் தெரியாதோ?
இல்ல ஊரு சனந்தான் அறியாதோ?

முந்தாநேத்தே முதலியார்கிட்ட
கந்து வட்டிக்கு, கடன வாங்கி,
இட்லி மாவரைச்சு,
தேக்குசாவுல நெரச்சுப்
போட்டேன்னா ராகாயி.

எகத்தாளம் பேசாதா
எருமைக்கு பொறந்த சிறுக்கி,
கால வாரி நெலத்துல
அடிச்சிடுவேன் , கம்முன்னு
இருந்துக்கோ சொல்லிப் போட்டன்.

முதுகெலும்பு ஒடஞ்சு போக
வயகாட்டுல செத்து வந்தாலும்,
கெடக்கிற கூலி வெறும்
அறுபது ரூவா.
இதுல எங்க சேத்து வக்க,
இல்ல பொங்க பொங்கித்தான்
திண்ணு பாக்க.

எட மறச்ச ராக்காயி,
அட கூறுகெட்ட மச்சான்,
சும்மா வெசனப் படாத,
இந்த கேணச் சிறுக்கி
சொன்னது அம்புட்டும் நெஜமில்ல,
நீ ரோசிக்கவும் தேவையில்ல.

மனசு கலங்காம,
பாயி கடைக்கு போயி,
ஒடச்ச கடலையும்,
ஒரு ரூவாக்கு தேங்கா
கீத்தும் வாங்கியா சொன்னா.

காஞ்சு கெடந்த வெறகேடுத்து,
மருந்துபோல மண்ணெண்ன காட்டி,
பதுக்கி வச்சிருந்த நாலு
தீக்குட்ச்சீல ஒன்நெடுத்து,
சூதானமா ஒரசிவிட்டு,
அடுப்ப பத்த வச்சா.

வச்சிருந்த ஒரு பானையில
தண்ணி நெரப்பி,
கொதிக்க விட்டு,
தட்டக் குச்சிய ஏத்த
எறக்கமா வச்சு,
நறுக்கி வச்ச பழைய லுங்கி பிட்ட,
கசக்கி எடுத்து,
தட்டக் குச்சி மேல விரிச்சு விட்டு,
குழி பண்ணி,
அதுல மாவ நெரப்பி,
ஒயர் கூடைய பாண மேல கவுத்தி,
இவ மாத்துப் பொடவையாள
ஒயர் கூடைய பொத்தி வச்சு,
இட்லிய வேக விட்டா.

வெந்த இட்லிய,
ஆவி பறக்க,
அலுமினிய தட்டுல போட்டு,
அரச்சு வச்ச தேங்காச் சட்டினிய
ஊத்தி விட்டு,
ராசுகுட்டிய எழுப்பி விட்டா.

எழுந்த குட்டி பய,
கோட்டு வாய துண்டுல தொடச்சி,
சம்மனங்காலிட்டு தட்டுமேல
பாஞ்சான்.

இட்லியை பிச்சு பாத்தா,
பிய்யவே இல்ல,
முட்டி முட்டி முடியாம போக.

கையாள இட்லியை எடுத்து
கடிச்சுப் பார்த்தான்.

ஐயோன்னு ராக்காயி கத்த,
என்னாச்சுன்னு காளியப்பன் கதற,
ராசுக்குட்டிக்கு ஒன்னுமே புரியல.

கொல்லையில போறவனே,
நெதம், நெதம் நடுசாமத்துல
என் கையை கடிக்கிறதே
வேலையா போச்சு.

இன்னைக்கும் கெனாவா?
அதே இட்லியா?

இட்லி திண்ணு ஆறு
மாசங்கூட ஆவுலையே,
அதுக்குள்ளே குறு நில
ராசாவுக்கு இட்லி கேட்க்குதோ?

இழுத்துப் பொத்திட்டு தூங்கு
இல்லன்னா குடிக்கிற கஞ்சியையும்
கொறச்சு புடுவேன்னு சொன்னா,
ராக்காயி!!!!

முதல் இரவு...!

வெகு நாட்கள் வெள்ளந்தியாய்
திரிந்து கொண்டிருந்த எனக்கு
அன்று தான் முதல் இரவு.

மந்தமான வெளிச்சம்.
அறையெங்கும் மஞ்சள் நிறமே
பரவிக்கிடந்தது.

அலங்கரிக்கப்பட்ட பழைய
கட்டில்.
பழுப்பு நிற பஞ்சு மெத்தை.
பூ போட்ட தலையணை.

கட்டில் சுற்றிலும்
மல்லிகை பூச்சரங்கள்
தோரணங்களாய்.

மெத்தைமேல் கவனமாக
சிதறி இருந்த மலராத
மல்லிகை மொட்டுகள்.

தட்டு நிறைய லட்டுகளும்,
பல மாதிரியான பழங்களும்,
பக்குவமாய் பரப்பி
இருந்தது.

சந்தன ஊதுபத்தியும்
சித்தத்தை சிலுப்பியது.

கசங்கிய வெண் பட்டு சட்டை,
கரை படிந்த வேஷ்டியோடு
நாற்காலியில் நாசூக்காய்
அமர்திருந்தேன்.

சிரித்த முகம்,
சிறுத்த உருவம்,
மாநிறமாய் இருக்கும்
மார்கண்டேயன் நான்.

இருந்தும் கல்யாணதிருக்காக
காத்துக் கிடந்தேன், சுமார் ஐந்து வருடங்கள்.
என்னை பார்த்த பல பெண்கள்
நிராகரித்தனர், இவள் உட்பட.

அப்போது கதவு திறந்த
என்னவள் என்னருகே வந்தாள்.

பொன்னிறம், எடுப்பான தோற்றம்,
உயிரை உலுக்கும் உயரம்,
தங்கக் குட இடுப்பு,
சுண்டி இழுக்கும் கூந்தல்,
மெழுகுச்சிலை மேனி
கொண்ட இவளை சொந்தங்கொண்டாடி
சூரையாடுவேன் என்று
சொப்பனத்திலும் நினைத்ததில்லை.

பால் சொம்பை பற்றி
பத்தினியை படுக்கையில்
அமரச் செய்தேன்.

அவள் பிஞ்சு விரல்களால்
என் உள்ளங்கையை வருடிப் பார்த்தேன்.
கொஞ்சம் சிலிர்த்துப் போனேன்.

சிறுது நேரம் உரையாடி,
குண்டு பல்பை அனைத்து,
என்னவளை கிடத்தி,
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
நிலா காய்ந்தேன்.

சுவையுள்ள கனிகள் இருந்தும்,
சுவைக்க மனம் இல்லாமல்.
சுவையற்ற கனியை சுவைக்க
துடிக்கிறது என் மனம்.

கொலுசுகள் சிரிக்க,
கட்டில் கால்கள் கைதட்ட,
அரங்கேறியது எங்கள் மெத்தை நாடகம்.

அவள் காதோடு
ஏதோ சொல்ல நினைத்து
இதழ் பதித்தால்,
சுரீர் என்று கம்மல்
என் உதடை பதம் பார்த்தது.

இதழாலே கம்மல்
கலையப் பார்த்தேன்,
ஏதோ கையில்லாதவன் போல்.

அப்போது என் மூச்சுக் காற்று
அவள் காதில் அனலாய் பாய,
கூச்சம் உச்சம் தொட்டு,
வாழை மீனாய் வளைந்து குலுங்கினாள்.

புருவத்தை வருடிப் பார்த்தேன்.
புண்ணியவதியின் முகம்
வெட்கத்தில் இன்னும் பூரிப்பானது.

இருக்க மூடி இருந்த
விழிகளை திறக்கச் சொன்னால்.
மறுதலித்தாள்.
போராடி போராடி தோற்றதால்,
இதழை குறிவைத்தேன்.

தேனில் ஊறிய பிலாச்சுலையாய்
மின்னியது.
இதழின் மினுமினுப்பு
கண்களை கூசியதால்,
என் இதழ் கொண்டு அணைத்தேன்.

இதை எதிர்பார்க்காத அவள்,
பரிதவிப்பில் கண்கள் திறந்தாள்.
உற்றுப் பார்த்த நான்,
சற்று சூடானேன்.

இந்தக் கண்கள் தானே
என் அழகை மூன்று முறை
தவறாகவே இவளிடம் பறை சாற்றியது?

பிடுங்கி விடுகிறேன் அந்த
விழிகளை என்று,
விரல்கள் கொண்டு, நோண்டி
எடுத்து, நசுக்கினேன்.

உன்னை பிடிக்கவில்லை,
என்று சொன்ன அந்த நாக்கை,
இழுத்து பிடித்து, என் பற்களால்
கடித்து துண்டித்தேன்.

பார்கவே வெகு கோரமாக
இருந்தாள்.
கொஞ்சம் சந்தோசப் பட்டேன்.

திடிரென்று யாரோ உள்ளே
வர, திரும்பி பார்த்தால்
என் புது மனைவி.

ஏன் இரு ஆரஞ்சுகளும்,
வாழைபழத் தோலும்
இப்படி சிதறிக் கிடக்கிறது என்றாள்.

ஏதோ பதட்டத்தில்
செய்திருப்பேன் என்று சமாளித்தேன்.

அருகில் வந்தவள்,
நாம் இருவரும் முதலில் நன்கு
பேசிப் பழகுவோம் என்று
சொல்லி, படுகையில் படுத்தாள்.

விளக்கையும் அணைத்தாள்.
இருவரும் சேர்ந்து படுத்தோம்.
லேசாக அவள் தோலில்
கை வைத்தேன்.
"முதலில் நன்கு பேசிப்
பழகுவோம் என்று சொன்னேனே,
புரியாது உங்களுக்கு?"
என்று கூக்குரலில் அதட்டினாள்.
நான் அதிர்ந்து, அடங்கிப் போனேன்.

அன்று ஆரம்பித்த அவளின் அதட்டல்,
இருபது வருடமாகியும்
இன்றும் தொடர்கிறது....!

Tuesday, 6 March 2012

சூப்பர் சிங்கர்!!!

சுத்த சுதி.
அருமையான குரல் வலம்.
சரண் உனக்கு மகனாய்
பிறந்தது, நீ செய்த
புண்ணியம் என்பர்,
என் உறவினர்களும்,
நண்பர்களும்.

பல முறை யோசித்தபின்,
நானும் என் மனைவியும்
முடிவுசெய்தோம்.
சரணை சூப்பர் சிங்கர்
போட்டிக்கு அனுப்ப.

அலை கடலென
திரண்டிருந்தது கூட்டம்.
ஆர்பரிக்கும் உற்சாகம்.
எப்படியோ பதிவு செய்து
உள்ளே சென்றோம்.

என் ஏழு வயது மகனின்
முதல் பாட்டு.
பாடக் கேட்ட நடுவர்கள்
எழுந்து நின்று கைதட்டினர்.
தேர்வும் செய்தனர்.

எங்களின் மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை.
சரணும் ஆகாயத்தில் பறந்தான்.

முதல் சுற்றுக்கு
முந்நூறு பேர் தேர்வானர்.

இவனும் நேரம் கிடைக்கும்
போதெல்லாம் பாடி பக்குவப் பட்டான்.

முதல் சுற்றிலும்
பார்த்தவரையும், பங்கேற்றவரையும்
வாய் பிளக்க வைத்தான்.
விளைவு இரண்டாம் சுற்றுக்கு
தகுதி பெற்றான்.

நிகழ்ச்சி இயக்குனரோ
எங்களை அழைத்து குரல்வல
நிபுணரிடம் அறிமுகப்படுத்தினார்.
எங்கள் கணங்களில்
ஆனந்தக் கண்ணீர்.

அடுத்த சுற்றுக்கு
ஒரு மாத அவகாசம் இருக்க.
சரணுக்கு தினமும்
மூன்று மணிநேர பயிற்சி அளித்தனர்.
நன்றாக தேரிவந்தான்.

மூன்றாம் சுற்றிலும்
தேர்வானதால்,
இன்னும் கடுமையான
பயிற்சி.
இதைக் கண்ட பள்ளி
நிர்வாகம் சரணை மேலும்
ஊக்குவிக்க விடுமுறை தந்தது.

நேரத்தை நன்கு பயன் படுத்தி,
பல சுற்றுகள் தேறினான்.
நாங்களும் பிரபலங்கள்
ஆனோம்.

நிகழ்ச்சி தயாரிப்பாளர்
சரணுக்கு மாதம் இருபதாயிரம்
தர ஆரம்பித்தனர்.
மேலும் உடைகளும்,
வாகனமும் தந்து உற்சாகப் படுத்தினர்.

இந்த எட்டு மாதத்தில்
சரண் ஒரு பெரிய
நட்சத்திரமாய் ஜொலித்தான்.
இன்னும் மூன்று தினத்தில்
இறுதிச் சுற்று.

இன்று மதியும்
கோவில் சிறப்பு வழிபாடு
செய்ய காரில் சென்று கொண்டிருந்தோம்.

வழி நடுவில்,
ஒரு பத்து வயது சிறுவன்,
காரை இடை மறித்து,
பொம்மைகள் வாங்கிக் கொள்ள
வற்புறுத்திக் கெஞ்சினான்.

என் மனம் ஏதோ பதை
பதைத்து, கண்ணில் நீர் கட்டி,
ஒரு பொம்மை வாங்கிக் கொண்டு,
அவனை அனுப்பிவைத்தேன்.

ஏன் கண்களில் நீர்
என்று சரண் கேட்டான்.

இந்த பத்து வயதில்,
பள்ளிக்குச் செல்லாமல்,
நண்பர்களோடு விளையாடாமல்,
வேண்டியதை உண்ண முடியாமல்,
விரும்பியதை செய்யவும் முடியாமல்,
ஒரு குழந்தை தொழிலாளியாய்,
கஷ்டப்படும் அவன் விதியை
நினைத்து வருந்தினேன்.
என்றேன்.

அதற்கு சரண்,
அப்பா!
இந்த எட்டு மாதமும்,
நானும் பள்ளிக்குச் செல்லவில்லை,
விருப்பமான சாக்லேட், ஐஸ் கிரீம்,
ஜூஸ் மற்றும் கேக் உண்ணவில்லை,
விரும்பியதை செய்யவுமில்லை,
நண்பர்களோடு விளையாடமில்லை.

அப்படியென்றால் நானும்
குழந்தை தொழிலாளியா?
சொல்லுங்கள்?
என்றான்.