Saturday, 25 February 2012
மஹாலக்ஷ்மி
நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது,
விலை வாசியோ விண்ணை முட்டுகிறது,
தங்கத்தை தள்ளி நின்றே பார்க்க முடிகிறது.
பள்ளிக் கட்டணமும் பாடாய் படுத்துகிறது,
வரதட்சணை கொடுமையும் வரம்பு மீறுகிறது,
என்று நிதம் நிதம் புலம்பிக் கொண்டிருக்கும்
ஒரு சராசரி நடுத்தர வர்கத்தின்
சாபக்கேடு நான்.
பெயர் கதிரவன்.
கருத்த தேகம்,
சிறுத்த உருவம்.
மனைவி மாதவி.
சிவத்த நிறம்,
வரைந்து வைத்த சித்திரமாய் ஜொலிப்பாள்.
எனக்கு இரண்டு மகள்கள்.
அப்படியே என்னை உரித்து வைத்தது போல்.
முதல் பெண் குழந்தை
பிறந்த போதே பெரிதும் சங்கடப் பட்டேன்.
நான் ஒரு ஆண் வாரிசு விரும்பியன்று.
இருந்தாலும் இந்த சமுதாயத்தில்,
ஒரு பெண்ணை பெத்து,
பேணிக் காத்து,
கடன் வாங்கி,
தாரை வார்த்துக் கொடுப்பது,
அவ்வளவு எளிதன்று.
ஒரு ஆண் பிள்ளை இருந்தால்
செலவு குறைவு,
வரவும் பெறலாம்.
அடுத்ததாவது ஆண் குழந்தை
கிடைக்க விரும்பி,
ஏறாது கோவிலில்லை,
பண்ணாத பூசயில்லை,
இருந்தும் இந்த மூதேவியும் வயிறும்
இவளைப்போலவே அதிர்ஷ்டக்கட்டை.
கள்ளிப்பால் இட்டு கொள்ள
துணிச்சல் இன்றி சகித்துக் கொண்டேன்.
இந்தமுறை எப்படியும்
ஆண் வாரிசு அடைந்துவிடுவேன்
என்ற உறுதியோடு காத்திருக்கிறேன்.
இன்றோ, நாளையோ மூன்றாவது
பிரசவம் நிச்சயம்,
என்று எண்ணும்போது,
மாதவி கூச்சலிட்டாள்.
வலி வந்துவிட்டது.
ஆட்டோ பிடித்து உள்ளே அமர்தோம்.
இந்த முறை பெண் பிறந்தால்,
இருவரையும் எரித்துவிடுவேன்
என்று எச்சரித்தேன்.
மாதவி அழுதுகொண்டே
மௌனமாய் இருந்தாள்.
பிரசவ வலியை விட,
நான் என்ன சொல்வேனோ என்ற
பயமே அவளை உலுக்கியது.
ஆஸ்பத்திரி அடைந்து,
கைத்தாங்கலாக உள்ளே இட்டுச் சென்றேன்.
நர்ஸ் பார்த்தபின்,
வார்டில் அனுமதிக்கப் பட்டாள்.
நான் வெளியே நின்று,
விடாமல் சிகரட் புகைக்கலானேன்.
திடீர் என்று ஒரு யோசனை.
முடியுமா? முடியாதா என்ற கேள்வி வேறு.
முயற்சி செய்து பாப்போம்
என்று நர்சை அணுகினேன்.
காதில் விஷயத்தை சொன்னேன்.
முடியவே முடியாது என்றாள்.
என் நிலைமையை விலகினேன்.
போறாத ஏழ்மையையும் எடுத்துரைத்தேன்.
அவளும் ஏழை என்பதால் இசைந்து கொடுத்தாள்.
கையிலிருந்த 500 ரூபாயை திணித்தேன்.
இரண்டு மணிநேரம் கழித்து
என் மனைவியை பிரசவத்திற்கு
அழைத்துச்சென்றனர்.
வெகு நேரமாகியும் தகவல் இல்லை.
கொஞ்சம் பயந்து போய்,
வேறொரு நர்சிடம் கேட்டேன் விவரமறிய.
டாக்டர் இன்னொரு பெண்ணுக்கு
பிரசவம் பார்துகொண்டிருகிறார் என்றும்,
என் மனைவிக்கு சற்று நேரம் பிடிக்கும் என்றாள்.
அமைதிகாத்து, அப்படியே அயர்ந்துவிட்டேன்.
தீடீரென்று ஒரு வீச்சு குரல்
கேட்டு பரவசம் அடைந்தேன்.
குழந்தை என்னவென்று அறிந்துகொள்ள
தயாரானேன்.
யாரும் வெளியே வராததால்,
திரும்பவும் அமர்ந்தேன்.
சிறிது நேரம் கழித்து
இன்னொரு குழந்தையின்
சத்தம் வேறு.
உள்ளே இருந்த இருவரும்
குழந்தை பெற்றது உறுதியாயிற்று.
வெளியே வந்த நர்ஸ்,
காதில் என்னிடம் சொன்னாள்,
நாம் திட்டமிட்டபடி குழந்தையை
மாற்றிவிட்டேன் என்று.
இன்னுமொரு 500 பெற்றுச் சென்றாள்.
எனக்கோ ஆனந்தமோ, ஆனந்தம்.
பல நாள் வேண்டிக் கொண்டிருந்த
ஆண் பிள்ளை,
இன்று என் வசமானதை எண்ணி.
குழந்தையை பார்த்தேன்,
நல்ல பருமன்,
கருத்த தேகம்.
மனைவியோ இன்னும் மயக்கத்தின்
பிடியில்.
படபடப்பு அடங்குமுன்,
என் குழந்தையை பார்க்க
பக்கத்து அறை சென்றேன்.
அழகோ, அழகு.
அளவான பருமன்.
அடர்ந்த முடி.
குழி விழும் கண்ணம்.
பெரிய விழிகள்.
சிவந்த நிறம்.
அப்படியே வரைந்து வைத்த
சித்திரம் போல் ஜொலித்தாள்.
அருகில் குழந்தையின் தாய்.
நாற்காலியில் குழந்தையின் பாட்டி.
பாட்டியின் கைகளிலும்,
கழுத்திலும் தங்க நகைகள்
மின்னியதைக் கண்டு,
எனக்கு பேரானந்தம்.
எப்படியோ என் பெண் பிள்ளை
வசதியான வீட்டில் வளரப்போகிறாள் என்று.
அருகில் சென்ற நான்,
குழந்தை மகாலட்சுமி போல் இருக்கிறாள்,
நன்கு படிக்க வையுங்கள்,
நாடு போற்றும் நர்த்தகி போல் வருவாள் என்றேன்.
கூடவே பெண் குழந்தை பிறந்ததால்,
உங்களுக்கு ஏதேனும் மன
வருத்தம் உண்டா? என்றேன்.
அதற்கு அவள் பாட்டி,
அப்படியெல்லாம் இல்ல சார்,
எங்க தொழிலுக்கு பெண்
குழந்தை தான் தேவை என்றாள்,
லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டே!!!!!
Saturday, 11 February 2012
பார் போற்றும் பரோட்டா.....
பிஞ்சுக் குழந்தையாய் இருந்ததிலிருந்து,
இன்று வரை பரோட்டா என்றால்
மனது ரக்கை கட்டிப் பறக்கும்.
பரோட்டாவை,
இரு கைகள் கொண்டு,
பிய்த்து, சிதற விட்டு,
வட்டமாய் பரப்பிவிட்டு,
நடுவில் குளம் வெட்டி,
அதில் சால்னாவை
நிரப்ப விட்டு,
ஓரிரு நிமிடங்கள் ஊற விட்டு,
வெளிப்புறத்தில் இருந்து,
உள்நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக,
தள்ளிவிட்டு, சால்னாவில் நீந்த விட்டு,
ஐந்து விரல்கள் கொண்டு,
கொத்தாக அள்ளி,
வாயிலிட்டு, ஒரு பக்கமாய் தள்ளி,
மெது மெதுவாக, கடவாய் பல் கொண்டு,
அரைத்தால், கிடைக்கும் சுகமோ அலாதி.
நாம் எடுத்த இந்த பிறப்பின் பலனை
அந்த நொடியே அனுபவிக்க,
இதுவே ஆதாரம்.
இலை காலியாகும் வரை,
விருப்பம்போல், விரும்பியபடி,
உண்டுவிட்டு, கடைசியில்
விரல்களில் ஒட்டியிருக்கும்,
பரோட்டா துகில்களை நாக்கு கொண்டு,
தேடித் தேடி துடைத்தெடுத்து,
இலையையும் கையால்,
கழுவி எடுத்து வாயிற்கு,
வார்த்துவிட்டு எழுந்தால்,
மனதுக்கு இரட்டிப்பு சுகம்,
கிடைப்பது நிஜம்.
பரோட்டாவில் எத்தனையோ வகைகள்.
எங்கள் ஊரில் கொதிக்கும்
எண்ணையில் பொரிதேடுப்பர்,
மனமோ கொதிப்படங்குமுன்,
கொறித்து பார்க்க துடிக்கும்.
வீச்சு பரோட்டா உண்ணும்போது,
உடலின் வீரியம் கூடுவதாய் தெரியும்.
கொத்து பரோட்டா உண்ணுவதைவிட,
கொத்தும்போது எழும் சத்தத்தை கேட்டால்,
சித்தமே கலங்குவதாய் தோணும்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அடிக்கடி மனதுக்குள் எழும் கேள்வி,
பரோட்டா எப்படி தென்
இந்தியாவை அடைந்ததென்று.
சங்க இலக்கியம் படித்தவர்கள்
சொல்கிறார்கள், இது மொகலாயர்
ஆட்சிகாலத்தில் ஊடுருவி இருக்கும் என்று.
எத்தனையோ ஆச்சிரியங்கள் நேரில் கண்டதுண்டு.
ஆனால் பரோட்டா மாஸ்டர்,
பரோட்டா செய்யும் நேர்த்தியே
அளவிடமுடியா ஆச்சிரியம் தான்.
மேசையில் அண்டா மாவை,
அப்படியே கொட்டி,
உப்பும், தண்ணீரும்
மாறி மாறி, தூவி,
சில முட்டைகளை மிதக்கவிட்டு,
துண்டை இறுக இடுப்பில் கட்டி,
துண்டு பீடியை காதில் சொருகி,
கைகளை நல்ல தண்ணீரில் கழுவி,
அணிதிருக்கும் முண்டா பனியனில் துடைத்து,
ஒரு காலை பின் வைத்து,
முன் காலை முட்டுக் குடுத்து,
பரப்பியிருந்த மாவுமேல்,
பாய்ந்து பாய்ந்து தேய்ப்பார்,
முன்னும், பின்னும் மாறி மாறி தேய்த்து,
உருட்டி, பொரட்டி, குத்தி, அடித்து,
அலங்கோலப் படுத்தி,
ஒரு வழியாக உருவகப் படுத்தி,
கிண்ணத்தில் இருக்கும் எண்ணையில்
விரலை விளையாட விட்டு,
சிறு சிறு பந்துகளாய் உருட்டி,
ஓரமாய் வைப்பார்.
பிறகு உருண்டையை,
உள்ளங்கையால் நசுக்கி,
கொஞ்சம் பெரிதாகி,
இரு கைகள் கொண்டு,
விசிறி விசிறி விரியவிட்டு,
அதை கயிறாக்கி,
சங்குச் சக்கரம்போல்,
சுருட்டி சுளுகெடுப்பார்.
சுருட்டியதை தட்டையாக்கி,
கல்லில் போட்டு, வேகவிட்டு,
பத்து பத்தாய் கல்லில் இருந்து எறக்கி,
ஒன்றாய் வைத்து,
முதலாளியை மனதில் நினைத்து,
நாக்கை மடித்து கொண்டு,
ஒரு கையால் பரோட்டாவை பிடித்து,
மறு கையால் மாறி மாறி அடித்து,
அனல் பறக்க சர்வர் தட்டில் வீசுவர்.
நானும் பல வருடம்,
இதை கண்டு, கேட்டு,
கற்றுக் கொண்டதாய் நம்பி,
வீட்டில் தயாரிக்க ஆயத்தமானேன்.
மாஸ்டர் போல் நானும்,
மாவை எடுத்து, பரப்பி,
முட்டையை மிதக்க விட்டேன்.
துண்டும், துண்டு பீடியும் கிடைக்காததால்,
சார்ட்ஸ் போட்டு சமைக்கலானேன்.
மாவை பிசைந்து,
உருட்டி ஓரத்தில் வைத்து,
உருண்டையை உள்ளங்கையால்
நசுக்கி, இரு கைகள் கொண்டு,
விசிறினால், மாவு ராகெட்டாய்
மாறி, எகிறி எரிந்து கொண்டிருந்த
டூப் லைட்டில் பட்டு வெடித்து சிதறியது..
விசிறும்போது கைதவறி,
எண்ணெய் பாட்டிலில் மோதி,
அது தரையில் விழுந்து நொறுங்கியது,
சத்தங்கேட்ட என் மனைவி,
எட்டி வந்து, எண்ணெய் படர்திருந்த
தரையில் கால் பதித்து,
பல்லை பெயர்த்துக் கொண்டாள்.
தூங்கிக் கொண்டிருந்த என் தாத்தா,
சமையல் கட்டு சிலின்டர் வெடித்துவிட்டதாய்
எண்ணி, ஒரே அடியாக வாய் பிளந்தார்!!!
பேய்!!!!
விபத்தில் அகால மரணமடைந்தார்,
என் ஒரு உயிர் நண்பனின் அப்பா.
இன்று இறுதி சடங்கு முடிந்து
வலையன் காடு சுடுகாட்டில்
அடக்கம் செய்தோம்.
உறவினர்களும், அந்த உயிர் நண்பனும்
சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பினர்.
நானும் இன்னொரு நண்பனும்,
அருகில் இருந்த மதுகடைகுள்
நுழைந்தோம்.
நாங்கள் இருவரும் ஒரே
வாடைகை வீட்டில் தங்கியுள்ளோம்.
கட்டிடம் கட்டும் மேஸ்திரிகள் நாங்கள்.
சரக்கு அடிக்கும் போது,
ஈஸ்வரன் கேட்டான், நீ பேயை
பார்த்தது உண்டா என்று?
இல்லவே இல்லை,
அது வெறும் பொய் என்றேன்.
நான் பார்த்திருக்கிறேன் என்று
பட்டியளிட்டான்.
ஒரு முறை கட்டிலில்
பேயும் சேர்ந்து படுக்க வேண்டும்
என்று சொல்லி, என்னை கீழே தள்ளி விட்டது.
இன்னொரு சந்தர்பத்தில்,
குளிக்கும் போது, பேயும் சேர்ந்து
குளிக்கவேண்டும் என்றதற்கு,
முடியாது என்று மறுத்தேன்.
பேயோ படார் என்று பாத்ரூம்
கதவை திறந்து விட்டது.
குடியிருந்த அனைவரும்,
சிறு கூச்சம்கூட இன்றி என்னை
கண்டுகளித்தனர்.
வேறொரு முறை நான்
குனிந்திருந்த போது,
ஒரு பேய் குதித்து, என் முதுகில்
ஏறிக்கொண்டு, அரை மணி நேரம்
கீழே இறங்காமல் அடம்பிடித்தது.
நடுவில் இடை மறுத்த நான்,
உனக்கு வாய்த்ததெல்லாம் இளம்
மோகினி பேய்கள் என்று கலாய்தேன்.
ஆறு ரௌன்டிலேயே ஈஸ்வரன் தலை தொங்கிவிட்டது.
வீட்டில் பாப்போம் என்று சைக்கிளை
எடுத்து கிளம்பிவிட்டான்.
எனக்கு இன்னும் போதை ஏறாததால்,
ஒரு ஆப் வாங்கினேன்.
ஏனென்று தெரியவில்லை,
திடீர் என்று ஒரு பயம்,
வீடு சென்று விட மனது துடியாய்
துடித்தது.
பேசிய பேய் கதைகள் என்னை ஏதோ
செய்துவிட்டதாய் உணர்தேன்.
ஒரே கல்பில் ஆப்பை முடித்து,
தண்ணீர் பாக்கெட் கொண்டு முகம்
கழுவி, சைக்கிளை எடுத்தேன்.
மணி பார்க்க மொபைல் எடுத்தாள்,
சார்ஜு குறைந்து சாகும் தருவாயில்
இருந்தது. மணியோ இரவு 11 :50 .
சீக்கிரம் வீடு செல்ல ஒரே
குறுக்கு பாதை, வலையன் காடு
சுடுகாடு வழி.
பயத்தை புறம்தள்ளி சைக்கிளை
மிதித்தேன்.
சினிமா பாடல்கள் முணுமுணுத்துக்
கொண்டே சென்றேன்.
சுடுகாடு நெருங்கும் போது,
திடீரென்று தெரு விளக்குகள்
அணைந்தது.
திக் என்று இருந்தது.
முகமுழுதும் வியர்வை.
ஓடிக் கொண்டிருந்த இருதய
துடிப்பு, இப்போது நடக்க ஆரம்பித்தது.
கும் இருட்டு, மயான அமைதி.
ஒரு ஈ, காக்க கூட இல்லை.
எங்கோ லேசாக பீப் பீப் என்று
சத்தம் கேட்கலாயிற்று.
பயம் தொற்றிக் கொண்டு,
சைக்கிளை வேகமாக மிதித்தேன்.
இப்போது ஜல், ஜல் என்று
சலங்கை சத்தம்,
பின் தொடர ஆரம்பித்தது.
திரும்பி பார்க்க பயமாக இருந்தது.
சைகிள் லைட் வெளிச்சத்தில்,
பஞ்சாய் பறந்தேன்.
இப்போது ஜல், ஜல் சத்தம்
மிக அதிகமாக கேட்கலாயிற்று.
தைரியத்தை வரவழைத்து,
சைக்கிளை ஓடிக்கொண்டே,
திரும்பி பார்த்தேன்.
எதுவுமே இல்லை.
அப்பாடா என்று சொல்லிக்கொண்டு
திரும்பும்போது, என் சைகிள் ஏதோ
ஒன்று மேல் மோதியது.
நானோ தூக்கி எறியப் பட்டேன்.
விழுந்தது ஒரு 6 அடி உயரம்
உள்ள குழிக்குள்.
கும் இருட்டு.
படபடப்போ, படபடப்பு.
ஐயோ, ஐயோ என்று கத்தினேன்.
பதிலுக்கு ஐயோ அம்மா, ஐயோ அம்மா
என்று அலறல் கேட்டது.
பீப் சத்தம் வேறு விடாமல் கேட்டது.
நானோ திரும்பவும் தலைவெரிக்க
கத்திக் கொண்டே இருந்தேன்.
திடீரென்று செந்திலா, செந்திலா
என்று என் பெயரை பேய் உச்சரித்து.
எனக்கு பயம் உச்சம் தொட்டு,
ஏற முயற்சித்தேன்.
ஏதோ ஒரு பொந்து கிடைத்து,
ஒரு காலை அதில் சொருகி,
ஏறினேன்.
அப்போது பேய் என் காலை
பிடித்து, போகாதே, ஏற முடியாது,
என்னையும் கூடிச் செல் என்றது.
கால்கள் நடுக்கம் கண்டு,
ஐயோ, ஐயோ என்று கூவிக் கொண்டே,
ஒரு காலை விசிறி பேயை உதைத்து
தள்ளி, மேலே ஏறி விட்டேன்.
இருட்டில் எப்படியோ சைக்கிளை
தேடி எடுத்து மதம்பிடித்த யானைபோல்
மிதித்தேன்.
வீடு வந்து சேர்ந்து,
சைக்கிளை பார்த்தால்,
ஒரே அதிரிச்சி.
நான் ஓட்டி வந்தது, ஈஸ்வரனின் சைகிள்.
திரும்பவும் பயம் வந்து,
அவசர அவசரமாக பான்ட்
பாக்கட்டில் சாவி தேடினால்,
மதுக்கடையில் குடுத்த சில்லறை
காசுகள் மட்டுமே இருந்தது.
மறு பாக்கெட்டில் பீப் சத்தம்
போட்டுக் கொண்டிருக்கும் என் மொபைல்.
அப்போ ஈஸ்வரன் எங்கே?
கருத்தா இருப்பாயடி....
ஒன்னப் பெத்தா,
ஒய்யாரம்!
ரெண்டப் பெத்தா,
ரீங்காரம்!
மூனப் பெத்தாலோ,
திண்டாடம்ன்னு சொல்லுவாங்க!
நானோ நாலப் பெத்து,
நாய் படாத பாடு பட்றேனே?
அதுவும் பொட்டச் சிரிக்கியா
பெத்துப் போட்டு,
தெனம் தெனம், செத்து செத்து,
சுண்ணாம்பா வாடுறேனே?
மகராசன் பாக்குற வேல
தாறு காட்சி ஊத்துறது,
அதுல வர்ற காச வச்சு,
இறுக்கி புடிச்சு கஞ்சி காச்சிறோம்.
அதையே குடிச்சு பசிய ஆத்துறோம்.
எரும மாடு கணக்கா ஒருத்தி.
கரும்பு சல்ல போல இன்னொருத்தி.
இந்த ரெண்டு சிறுக்கியும்,
வயசுகுக்கு வந்தும் வருசாமாச்சு.
கட்டிக் குடுக்கு காப் பவுனு
தங்கம் தவுர வேறொன்னுமில்ல.
முழுகாம இருக்கும் போதும்,
மாடாக ஓலைச்சேனே.
இந்த குடும்பம் தல தூக்க,
ஓடாவும் தேஞ்சேனே.
இதுகல கரசேத்தி,
பொணமா நான் பொதய,
இந்த ஜென்மம் பத்திடிமோ?
கொலசாமி நீ சொல்லு?
காலையில பசுமாடா
திரியுற எம் மச்சான்,
ராட்சசணா மாறுறாண்டி
ராத்திரியில.
சேந்து படுத்து,
வகுத்த நெறச்சு,
குடும்பம் விரிஞ்சு
போச்சுதடி.
வாங்குற சம்பளத்த
பெருக்க தெரியாத
எம் புருஷன்,
வகுத்த மட்டும் விதவிதமா,
நெறைக்கும் வித்தைய
எங்க தான் கத்துவந்தானோ,
தெரியலடி?
உனக்கு ஒன்னும் தெரியாது,
இதுல எதுவும் நடக்காது,
நாளிருக்கு, நாளிருக்குன்னு
சொல்லி சொல்லியே,
என்ன நாலு மொற
நாசமா போகவஞ்சாண்டி.
அடுத்தடுத்து, பெத்து பெத்து,
காத்தில்ல பலூன் ஆச்சுதடி,
என் உடம்பு.
காசரும கண்டதில்ல,
மெச்சு வீட்டுல வாழ்ந்ததில்ல,
கலர் கலரா துணியுமில்ல,
பல பலகாரம் உண்டதில்ல,
பசியாறி படுத்ததில்ல,
பளீர்ன்னு ஒரு நாளும் சிரிச்சதில்ல.
இருள் சூழ்ந்த வேலையில,
உட்ட சொகத்த எல்லாம்,
ஒன்னா புடிச்சுக்கிட,
கட்டிக்குவேன் என்
ஆச மச்சான!
வேறென்ன நாங்க செய்ய?
இப்போ ஏதேதோ வந்திருக்காம்,
இனக்கமாவும் இருக்குதாம்,
அதுவே இனப் பெருக்கத்தையும்
தடுக்குதாம், தெரிஞ்சுகோடி முத்தழகி!
கூப்பன் கடையிலையும்,
குடுப்பாகலாம்.
மண்ணெணையோடு சேத்து,
மறக்காம வாங்கிக்கோடி
கவனமா கையாண்டா
கவலையில்லையாம்.
கருத்தா இருந்துக்கோடி!!!
Wednesday, 8 February 2012
நம்பினார் கெடுவதுண்டு!!!
லண்டனில் கிரிக்கெட் போட்டி.
விரல் விட்டு என்னும் அளவே கூட்டம்.
இறுதி கட்டம் அடையும் சமயம்.
என் போறாத வேலை.
பிதுங்கிய விழிகளுடன்,
களத்தில் நிற்கிறேன், பேட் செய்ய.
இன்னும் 12 ரன்கள்.
ஆறே பந்துகள்.
அடித்து மட்டுமே ஆடவேண்டும்,
என்ற நிர்பந்தம்.
ஆண்டவனை துதிதுக்க் கொண்டு.
ஆடாமல், அசையாமல்,
பௌலரை வெறித்து பார்த்தபடி,
விறைத்து நிற்கிறேன்.
முதல் பந்து வீச,
முருகப் பெருமானை நினைத்து,
பேட்டை முறுக்கி வீசினேன்.
பந்து பேட்டில் மட்டும் படவில்லை.
விரக்தியில், கொஞ்சம் வியர்துபோய்,
ஸ்வெட்டரை கழட்டினேன்.
ஒரு டிகிரி குளிரும் என்னை உஷ்ணம் ஏற்றிற்று.
இரண்டாவது பந்து,
எட்டி அடிக்க எகிறினேன்,
பந்தோ கால் சந்தில் புகுந்து,
கீப்பரை அடைந்தது.
திரும்பவும் விரக்தி,
இந்த முறை கழட்டி போட
எதுவுமின்றி, கப் சிப் என்று நின்றேன்.
வெளியில் இருந்த கிருஷ்ணன்,
கொலை வெறியில் கத்தினான்..
இப்போது வெளியே வர முடியுமா?
முடியாதா? என்று..
இந்த கேள்வி என் காதை கூசியது.
வந்த மூன்றாம் பந்தை,
தூக்கி அடிப்பதா?
இல்லை தரையோடு ஆடுவதா?
என்று யோசிக்கும் போது,
வீசிய பந்தே என் பேட்டை தொட்டுவிட்டு,
கீப்பரின் கையில் அமர்ந்தது.
தலை தொங்கியபடி,
பெவில்லியன் அடைந்தேன்.
வெட்கமாக இருந்தாலும்,
முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டேன்.
தோல் தட்டியபடி உள்ளே அனுப்பினர்,
என் சகாக்கள்.
கிருஷ்ணன் மட்டும் அடங்கா கோபம்
கொண்டே ஆர்பரித்தான்.
அவனை சமாதானம் செய்யத் தெரியாமால்
யோசிக்கும் வேளையில்,
எங்களின் போட்டி முடிந்தது.
நாங்கள் தோற்றும் போனோம்.
இவன் கோபம் இன்னும் அதிகமாயிற்று.
ஏன் என்று யோசித்தபோது.
தலையில் யாரோ சமட்டி கொண்டு
அடித்தார் போல் உதித்தது ஒன்று.
ஆம் கிர்ஷ்ணனை இன்று
ஏர்போர்டில் விட உறுதியளிதிருந்தது!
மணியோ 4 .30 .
இவன் விமானமோ 5 .30 க்கு.
செய்வதறியாமல் டாக்சிக்கு
போன் அடித்தேன்.
எவனும் எடுக்கவில்லை.
இதை பொங்கிய பார்வை கொண்டு
பார்த்த கிருஷ்ணனிடம்,
பஸ்சில் செல்லாம் என்றேன்.
மௌனமாய் பின் தொடர்ந்தான்.
நானும் மௌனத்தை கலைக்க,
கதகளி ஆடியும், காண்டு
குறையாத காண்டா மிருகமாய் காட்சியளித்தான்.
எனக்கோ வயிறு கலக்கியது,
கோபத்தில் அடித்து விடுவானோ என்று.
சிறிது இடைவெளி விட்டு சொன்னேன்,
இந்த ஏர்போர்டில் சனிக்கிழமை மட்டும்
விமானம் தாமாதத் தோடே கிளம்பும்.
தெரியும் தானே உனக்கு என்றேன்.
கொஞ்சமும் சிரிக்காமல்,
இன்று ஞாயிற்றிக் கிழமை என்றான், கிருஷ்ணன்.
பதில் சொல்ல வராமல்,
வாயை பொத்திக் கொண்டேன்.
ஏர்போர்ட் வந்து,
தலைவெரிக்க ஓடினேன்
ஏதோ ஒரு வெறி நாய்
துரத்துவதாய் எண்ணிக்கொண்டே.
கிருஷ்ணனோ கிண்டர் கார்டன்
குழந்தை போல் தத்தி தத்தியே வந்தான்.
விமானம் கிளம்பியதை,
செக்கின் கவுன்டரில்
விசாரித்துக் கொண்டு,
இடிந்து போய்
கிருஷ்ணனிடம் ஓடிச் சென்று
ஓதினேன்.
இது தெரிந்த விஷயம் தான்,
என்று தெனவெட்டாய் சொன்னான்.
மன்னித்து விடு,
எல்லாம் என் தப்பென்றேன்.
இல்லை என் தப்பு தான்
என்றாம் கிருஷ்ணன்.
அப்படி சொல்லாதே கிருஷ்ணா,
தப்பு என் மேல் தான் என்றான்.
அதற்கு கிருஷ்ணன் கேட்டான்,
உன்னை நம்பிய யாரும்,
உருப்பட்டது இல்லை என்று தெரிந்தும்!
நம்பினேன் உன்னை,
நாசமத்தும் போனேன்.
இப்போது சொல்,
தப்பு யாருடையது என்று?
Subscribe to:
Comments (Atom)
