Thursday, 19 January 2012

நல்ல தோர் வீணை செய்து.....


 

 

 

 

 

என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,
பரபரப்போடு ஒரு தம்பதி,
பறந்து கொண்டிருகின்றனர்,
அலுவலகத்துக்கு.

குடும்பச் சுமை குறைக்கின்றி,

செலவுகளை கொஞ்சம் சுமூகமாக்க,
பாடுபடுகின்றனர்.

இவர்கள் காலை ஏழு மணிக்கு,

பிரிகின்றனர்.
சேர்வதோ இரவு எட்டு மணிக்குத் தான்.
இடை இடையே செல்போனில் மட்டும்,
விட்ட காதலை கவ்விக் கொள்கின்றனர்.

இந்த தண்டனையை நாள் தோறும் அனுபவிக்க,

கம்பெனி தருவது கைநிறைய சம்பளம்.

இந்த தார்மீக தம்பதிக்கு,

பத்து மாதமே ஆன ஒரு
பிஞ்சு வெள்ளை முயல்.

இந்த பிஞ்சை பதனமாக

பார்த்துக்கொள்ள, ஒரு
பழுத்த பணிப்பெண் செல்லம்மா.

காலை 6.30 மணிக்கு

இந்த வெள்ளை முயல்,
செல்லமாளின் அரவணைப்பில்.

கோழி கூட அடைகாப்பதில்

குறை இருக்கும்.
இவளின் அரவணைப்பை
அளவிடுவது கடினம்.

இன்றும் எப்போதும்போல்,

தம்பதியினர் முத்த மழை இட்டு,
செல்லம்மாளிடம் தாரை வார்க்க,
குழந்தையோ பிரிய மனமின்றி,
அழுதுகொண்டே பிரிந்தது.

மனைவியின் அலுவலகத்தில் மட்டும்

ஏதோ மின் துண்டிப்பு.
சரியாக மூணு மணி நேரம் ஆகும்
என்ற அபாய அறிவிப்பு வேறு.

செய்வதறியாமல் கணவனை

செல்போனில் துணைக்கு இழுத்தாள்.

அலுவலகம் வந்தது முதல்,

தன் முயலின் முகம் வந்து வந்து போவதை,
கணவனிடம் வடித்தாள்.

அவனோ வேலை இல்லையென்றால்,

மனசு இப்படி பரிதவிப்பது இயற்கை என்று
பதிலுரைத்தான்.

மேலும் இரவு வேளையில் தங்கள் முயல்,

ஒரு முறை கூட விழித்து எழாமல்,
அடித்து போட்டதுபோல் அசதியில்,
தூங்குவதையும் சுட்டினாள்.

கணவனோ வார இறுதியில்,

மருத்துவர் கண்டு வர உறுதியளித்து,
போனை துண்டித்தான்.

ஏசி இல்லாத அலுவலகம்,

இவளுக்கு தலைவலி தந்தது.

வீடு செல்லத் திட்டமிட்டு,

வண்டி அடைந்தாள்,
ஒரு சக்கரமோ தட்டை.

புலம்பிகொண்டே பஸ்சில் ஏறினாள்.

வேளச்சேரி வந்தடைந்து,
மறு பஸ் மாற நிற்கையில்,
நான்கைந்து பிச்சைக் காரிகள்
கையில் பச்சை குழந்தையோடு.

பார்கவே பரிதாபமாய் பட்டது.

விதியை நொந்து கொண்டே
தள்ளி நின்றாள்.

திடீர் என்று தன் குழந்தை

ஞாபகம் வர, வீட்டிற்கு தொடர்பு
கொண்டாள்.

இனிமை குறையாமல்,

இனிக்க, இனிக்க பேசிய
செல்லம்மா.
தன் குழந்தை தூங்குவதையும் உரைத்தாள்,

இவளையே உற்று நோக்கியபடி

ஒரு பிச்சைக்காரி வாஞ்சையோடு
நெருங்கினாள்.
இவளோ அவசரமாக போனை
துண்டித்து, பிச்சையிட தயாரானாள்.

வந்த பிச்சைக்காரி,

அம்மா! தாயே!
பச்சைக் குழந்தை,
சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு என்றாள்.

கையிலோ கிழிந்த, அழுக்கேறியே துணியணிந்த,

வெய்யிலில் வாடிப்போன,
பசியின் பிடியில் பொசுங்கிப்போன,
விக்கி, விக்கி,
சத்தமிடக்கூட சக்தியின்றி,
அழுது கொண்டிருந்த குழந்தையின்,
கரம் பற்றி,
பத்து ரூபாய் நோட்டை சொருக,
விழித்துப் பார்த்தது குழந்தை.
இவளுக்கோ வியர்த்துப் போனது!!

இவள் பிச்சையிட்டதோ,

தன்னுடைய பிஞ்சு
வெள்ளை முயலுக்கு!!!!!!!!!!!!!!!!!

நல்ல தோர் வீணை செய்து,

அதை நலம் கெட புழுதியில்
எறிவதுண்டோ???

எதைத் தேடுகிறாய்.....?

 

 

 

 

 

 

 

 

இந்த பூவுலகில்
பூத்ததில் இருந்து,
இன்று வரை ஓயாமல்
தேடிக் கொண்டே ஓடுகிறாய்,
இலக்கு ஏதுமின்றி!

பணத்தை தேடி பாடாய் படுகிறாய்!
கிடைத்தபின் அதை பன்மடங்கு பெருக்க,
பேயாய் உளவுகின்றாய்!

மண் வீட்டை மாடி வீடாய் மாற்ற,
மாதக் கணக்கில் மாடாய் உழைகின்றாய்!
ஒரு வீடு வாங்கியபின்,
மறு வீடு வாங்க மன்றாடுகிறாய்!

பதவி ஆசை கொண்டபின்,
கொலை கூட செய்ய துணிகிறாய்!

குழந்தை பெற்ற பெற்றோர்கள்,
முதல் மதிப்பெண் மட்டுமே பெற்றுவிட,
தன் பிஞ்சுகளை பழுதாய் போகும்
எந்திரம் ஆக்குகின்றனர்!

அளவற்ற ஆசை,
நிலையற்ற இலக்கு,
நிம்மதியற்ற வாழ்க்கை,
மருத்துவர் சொன்னால் மட்டுமே உடற்பயிற்சி.

அலுவலகமே வீடு,
வீடோ வெறும் ஓய்வெடுக்கும் கூடு.

கணவனும், மனைவியும்,
தான் பெற்ற பிள்ளை மட்டுமே சொந்தம் என்பர்.
மற்ற உறவினர்கள் தொந்தரவு என்பர்.

இத்தலைமுறையினர்,
சாவாலான வாழ்கையை விரும்புகின்றனர்.
போராட்டமான வாழ்கையே பிடிக்கிறது.

தேடுதல் இல்லை என்றால்,
தொலைந்து விடுவோம் என்று நம்புகின்றனர்.
சாதிக்க மட்டுமே பிறந்தவர்
என்று கூவுகின்றனர்.

சரி,
சவாலை எதிர்கொள்கிறாய்!
போராடி வெல்கிறாய்!
சாதிக்கவும் செய்கிறாய்!

பிறகென்ன என்று கேட்டால்?
திரும்பவும் தேடுதலை தொடர்கின்றாய்,
எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலே.........................

Friday, 6 January 2012

2012 புத்தாண்டு சபதங்கள்.....

 

 

 

 

 

 

 

 

விடுமுறையாயினும்
விடியல் முன் கண் விழிப்பேன்.
மார்கழி மாதத்திலும் கூட!

பல் துலக்கியே பிறகே
காபி அருந்துவேன்.
ஞாயற்று கிழமையும் கூட!

குளித்தவுடன் குலதெய்வ
வழிபாடு செய்வேன்.
அன்று ஏதொரு பிரச்சனைகள்
இல்லை என்றாலும் கூட!

கஷ்டப்பட்டாவது காலை உணவை
கடவாயில் திணிப்பேன்.
அது உப்புசப்பின்றி இருந்தாலும் கூட!

உயிரைக் கொடுத்தாவது
உடற்ப் பயிற்சி மையம் செல்வேன்.
உயிர் நண்பன் வரவில்லை என்றாலும் கூட!

அலுவலகம் செல்லும் முன்
ஆசையாய் மனைவிக்கு முத்தம் தருவேன்.
அவள் முகம் அஷ்டகோணத்தில்
இருந்தாலும் கூட!

மெனக் கெட்டாவது அலுவலகம்
செல்வேன், குறித்த நேரத்தில்.
மேனேஜர் விடுப்பில் உள்ள போதிலும் கூட!

கோழிக்கு பதில் பச்சை
காய் கறிகள் உண்பேன்.
தலையில் கொம்பு முளைத்தாலும் கூட!

புகைப்பதற்கு புல்ஸ்டாப்
வைக்கவில்லை என்றாலும்,
ஆறிலிருந்து நான்காக குறைப்பேன்.
அன்று நாய் படாத வேலை பார்த்தாலும் கூட!

குடியை மாதமொரு
முறையாய் குறைப்பேன்.
மதிகெட்ட நண்பர்கள்
மதிக்கவில்லை என்றாலும் கூட!

வார வாரம் தண்ணி
கொண்டு வண்டி துடைப்பேன்.
வண்டி வொர்க் ஷாப் சென்று
வந்திருந்தாலும் கூட!

தொலைக்காட்சியுடன் கொண்ட
தொடர்பை துண்டிப்பேன்.
இன்டர்நெட் பழுதாய் இருந்தாலும் கூட!

கோபத்தை அடக்கிக் கொள்வேன்.
மனைவி சிரிக்கும் போதும் கூட.

மாமியார் பிறந்த நாளை
மறக்க மாட்டேன்.
அன்று சரக்கோடு சம்சாரித்து இருந்தாலும் கூட!

முகப் புத்தகத்தில் முங்கி முங்கி
முத்தெடுக்க மாட்டேன்.
முல்லை பெரியாறு விவகாரம் முடிவுக்கு வந்தாலும் கூட!

அறிவை பெருக்க தேடித்
தேடி படிப்பேன்.
சுத்தமாக புரியவில்லை என்றாலும் கூட!

தினந்தோறும் நடந்ததை
டைரியில் பதிவு செய்வேன்.
அன்று முழுவதும் படுத்தே இருந்தாலும் கூட!

முடிந்தவரை உண்மையே பேசுவேன்.
அலுவலகத்துக்கு லீவு
கேட்கும் போது கூட!

ஞாபகம் வரும்போதெல்லாம்
மனைவி இடம் அழகாய் இருகிறாய் என்பேன்.
பயமாய் இருந்தாலும் கூட!

மிக முக்கியமாக,
இந்த ஆண்டிலாவது எழுதிய
இந்த காகிதத்தை தொலைக்காமல்
பார்த்துக்கொள்வேன்.
கடைபிடிக்கவில்லை என்றாலும் கூட!!!

புத்தாண்டு வாழ்த்துகள்.

ஜாலியான ஜானவாசம்!















உயர் தர ஹோட்டலில்
தங்கி இருந்த நான்,
தயாராகிக் கொண்டிருந்தேன்.

ஒரே பட படப்பு.
ஏசி அறையிலும் வியர்வை,
விரட்டி விரட்டி அடிக்கிறது.

முதன் முறை திருமணம்
என்பதால், ஏக நடுக்கம்.
சிறுநீர் கூட என்னைச்
சின்னாபின்னம் செய்தது.

துண்டும் கையுமாக அறையை
சுத்தி சுத்தி வருகிறேன்.
எதைத் தேடுகிறேன் என்று தெரியாமல்.

சவரம் செய்ய நினைத்து,
கையில் ரேசர் கொண்டு,
மழுங்க வழிக்கப் பார்த்தேன்.
திடீர் என்று ஒரு குழப்பம்,
மேல் இருந்து கீழ் செறைப்பதா?
இல்லை கீழ் இருந்து மேல் செறைப்பதா? என்று.
பிறகு தான் நினைவுக்கு வந்தது,
காலையில் சலூன் சென்று வந்தது.

முகம் கழுவி, வெளியே வந்து,
ஒரு புது துணி அணிந்து,
கண்ணாடி முன் நின்றால்!
ஏதோ தவறாய் பட்டது.
ஆம் அணிந்த சட்டை, ஜாக்கெட் பிட்டு போல்
சிக்கென இருந்தது.
அணிதிருந்தது என் கடைசி தம்பியின்
சட்டையை!

சரி செய்த பிறகு.
தலை வாரி,
டக் இன் செய்து,
பெல்ட் கட்டி,
திரும்ப கண்ணாடி கண்டால் -
பின்புறம் பேண்டின் பல லூப்கள்
பல்லை காட்டிக் கொண்டிருந்தது.
ஆம் பெல்ட் அனைத்து லூப்பையும்
அனுசரிக்கவில்லை என்பதால்.
அதையும் சரி செய்து.

வாசனை திரவம் தேடி,
அக்குலில் அடித்தால்,
வாசம் வரவே இல்லை.
உஷ் என்று சத்தம் மட்டுமே கேட்கலாயிற்று.
உள்ளங்கையில் அடித்தேன்.
சென்ட் வெள்ளையாய் பொங்கி வந்தது.
ஐயய்யோ!! புரிந்து விட்டது.
அடித்தது ஷேவிங் போம் என்று.
அக்குளை விளக்கி பார்த்தால்,
பச பச என்று ஒட்டிற்று.

இவை அனைத்தும் திருத்தி,
காரில் ஏறி கோவிலுக்கு சென்றேன்.
மாலை ஆறு மணி.
பூசை புனஸ்காரம் முடிய ஒரு மணி நேரம்
பிடித்தது. திட்டப்படி திருமண
வரவேற்ப்பு தொடங்கவேண்டும், ஏழு முப்பதிருக்கு.
எப்படி முடியும்?.
யோசிக்கும் போதே கண்ணை கட்டியது.

யார் யாரோ என் முகத்தில்
மஞ்சள் சாயம் அடித்தனர்,
நலங்கு என்ற போர்வையில்.

கூட்ட நெரிசலால் சிலர்
சந்தனத்தில் விரலை முக்கி,
கன்னத்தில் விசிறி விட்டனர்.
அந்த மஞ்சள் சாயம் என் கண்ணுக்குள்
சிவப்பு வர்ணம் போட்டது.

மச்சான் சடங்கு முடித்து.
ஒரு தட்டில் சூட் வைத்து குடுத்தான்.
வாங்கிய நான் மரத்துக்கு பின்னால் ஆடை கலைந்தேன்.
லேட்டாய் வந்த சிலர்,
மாப்பிள்ளையை பார்க்கும் ஆர்வத்தில்
மரம் தாண்டி, என்னை மானபங்கப்
படுத்தினர்.

திடீர் என்று மின் வெட்டு வேறு.
வாழ்கையில் முதன் முறை சூட்
அணிகிறேன், அதுவும் கும் இருட்டில்.

எப்படியோ சுதாரித்து அணிந்து,
கழுத்து பட்டனும் இட்டு,
பையை தேடினால்?
டை இல்லை.
எனக்கு டை கட்ட தெரியாத
சேதி பெண் வீட்டாருக்கு தெரிந்து விட்டதோ
என்ற அச்சம் வேறு.
சரி சமாளிப்போம் என்று வெளியே
வர, கைபேசியில் மாமனார்.

உடனே மண்டபம் வர உத்தரவிட்டார்.
என்னை பார்க்க மண்டபத்தில் மக்கள்
கூட்டம் அலைமோதுகிறதாம்.

வேகமாய் செல்ல ஆயத்தப் படுத்தி.
அலங்கரிகப் பட்ட நீளமான காரின்
கதவு திறந்து, வீற்றிருந்த மர
நாற்காலிமேல் அமர்ந்தேன்.

என் மச்சானும் ஏறி, ஒரு
கயிறு கொண்டு கதவை தாழிட்டான்.
காருக்கு முன் வாத்தியக் காறர்கள்,
பின்னோ வரிசை தட்டோடு மகளிர் வலம் வர,
மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கிற்று.

தொடங்கிய மறு வினாடி,
என் கைபேசி மாமனார் அழைப்பினால் கதறியது.
விஷயம் புரிந்த நான்,

டிரைவரிடம் கேட்டேன்,
வண்டி வேகமா செல்லுமா என்று?
நாற்பது கிலோ மீட்டர் வேகம் தாண்டும் என்றார்.
அதுவும் சூடாகி விட்டால் சுனாமி தான் என்றார்.
பிறகென்ன ஹார்ன் கொடுத்து கிளப்புங்கள் என்றேன்.

சரி என்ற டிரைவர்,
நாற்காலியை நகுராமல் பிடுத்துக்கொளுங்கள்
என்றார்.

மேளக் காறர்கள் வண்டி வேகம் கண்டு ஒதுங்க.
பின் வந்தவர்கள் வாய் பிழந்து பார்க்க,
வண்டி பாய்ந்து சென்றது.

காரைக் கண்ட வீதி வாசிகள், ஏதோ
சினிமா ஷூட்டிங் என்று காமெராவை
தேடினர்.
தெரு நாய்களோ தெறித்து ஓடின.

மண்டபம் வந்து பிரேக் அடிக்க,
திரண்டு இருந்த கூட்டம் கண்டு,
மாப்பிள்ளையான நான்.
கை கூப்ப நினைத்து,
இரு கைகளையும் தூக்கியதால்,
ரோட்டில் குட்டி கரணம்
போட்டு விழுந்தேன்!!!!