Friday, 24 September 2010

பேருந்தில் பெண் குழந்தை....(சிறுகதை)

ஊர் அடங்கிய நேரம்,
குளிர் கடுகடுக்கும் போது,
பதற்றமோ படபடப்போ இன்றி,
பக்குவமாக பஸ்கள் அன்றைய இரவு
சேவைக்கு இருமி, இருமி, தயாரானது.

இந்த பஸ் திருச்சியிலிருந்து, கோவை வரை
செல்லும் சொகுசு வண்டி.

டிரைவர் வண்டியை லாவகமாக பின் நோக்கி
எடுத்து, நேர் செய்து, நிலையம் கடந்து,
மெயின் ரோடு தொட்டு, சுவாமி தரிசித்து,
ஒட்ட ஆரம்பித்தார்.

மணியோ இரவு 12 :30 , பேருந்தில் மொத்தம்,
நான்கு பேர் மட்டுமே, இதில் ஓட்டுனர், நடத்துனரும் அடக்கம்.

சிவகாமி கோவைக்கும், ஸ்ரீதர் கரூருக்கும் செல்கின்றனர்.
ஸ்ரீதருக்கு திருமணமாகி ஏழு வருடங்கள்,
குழந்தை வேண்டாமென்ற  கொள்கையோடு
ஊழியம் செய்கிறான்.
ஆனால் அவன் மனைவி கனிமொழியோ,
குழந்தை மட்டுமே உயிர் நாதமென்று நடை
பிணமாய் வாழ்கிறாள்.

பனையூரில் பஸ் நின்றது, பத்து நிமிடம்,
சிவகாமி இறங்கினால்.
ஸ்ரீதர் தூக்கம் துறக்க தயாராக இல்லை.

பஸ் நகர முற்பட்டது, ஒரு டிக்கெட்
எரலன்னு சத்தம் கொடுத்தார்,
இறங்கியும் பார்த்தார்.
பிரயோச்சனமின்றி, பிரயாணம் தொடர்ந்தது.

குளிர் தாழாமல், இடம்மாற்றி அமர்ந்தான் ஸ்ரீதர்.
அடக்கமான இடம், ஆனந்தமான தூக்கம்.
சிறிது நேரம் கழித்து, கழுத்து வலித்தால்,
கைகள் மடக்கி முன் கம்பிமேல் முட்டு கொடுத்து,
அதன் மேல் தலை வைத்து படுத்தான்.
கால்கள் குறுக்கி பின்னோக்கி தள்ளி வைத்தான்.
சிறிது நேரம் கழித்து, காலில் ஏதோ தட்டு பட்டு
எழுந்து அமர்ந்தான். பின்பு குனிந்து பார்த்தான்.
ஒரு ஒயர் கூடை, படுத்த வாக்கில்.
நிமிர்த்தி வைத்தான். தவறி விழுந்தது.

பூனை ஒன்று நெளிவது போல் நெளிந்தது ஒயர் கூடை.
பயத்தோடு, முன்னிழுத்து குனிந்து பார்த்தான்.
வெல்வெட் துணி போர்த்திய கூடை, அதை அகட்டி
பார்த்தால், பத்து நாளே ஆனா பச்சை குழந்தை.

ஐயோ, ஐயோ, என்று அலறி, பஸ்ஸை
நிறுத்தவைத்தான். தூக்கத்திலிருந்த நடத்துனர்,
ஓடி வந்தார்.
என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்ற கேள்வி.
எட்டி பார்க்க சொன்னான்.
இருவரும் பார்த்து, சிலையாயினர்.

சிவாகாமி மாயமான சங்கதி புரிந்தது மூவருக்கும்.
அடுத்தது, அருகிலுள்ள காவல் நிலையம் செல்வது என்று,
முடிவு செய்து, தொடர்ந்தனர்.
காவல் நிலையம் அடையும்வரை ஸ்ரீதரே
தற்காலிக தாய் தந்தை.
மறுக்கமுடியாமல், முறைத்துக்கொண்டே சரியென்று,
சம்மனக்காலிட்டு  அமர்ந்தான்.

தூக்கமாத்திரை இட்டு, இந்த இளம் மொட்டின் இமைகளை 
ஒட்ட  வைத்திருக்கிறாள், அந்த கல்நெஞ்சுக்காரி.

பெண் குழந்தை, உற்று பார்கிறான். மிக மிக
சுருங்கிய தோல், கறுத்திருந்த உதடுகள், வரைந்து
விட்ட தலை மயிர்கள்.

சன்னமான கைகள், வெண் பொட்டுபோல் நகங்கள்,
சுருட்டியே  வைத்திருக்கும் விரல்கள்.
மெல்லிய புருவம், அகண்ட நெற்றி,
வெண்தாமரை காதுகள், சிப்பி மூக்கு, சிந்தனை
தூண்டும் முகம்.

இவையனைத்தும் ஈர்க்கவே இல்லை, ஸ்ரீதரை.

அடுத்த காவல் நிலையம் தொட இரண்டு மணி
நேரம் உறுதி. லேசாக பையை விரித்து, பார்கிறான்.
அதில், சில  கிழிந்த சிறு துணிகள், மை டப்பா,
பால் பாட்டில்,  ஆரஞ்சு பழம், சிறு குப்பியில் தண்ணீர்.

குழந்தை கால்கள், ஸ்ரீதர் வயிறை லேசாக வருடியது.
கால்களை நேர் படுத்தினான், இப்போது சுருங்கிய
கைகள் தொடையின் மேல்.
பஸ்சின் ஓட்டத்தால் கைகள் விட்டுவிட்டு
தொடையை தட்டியது.
அது கூசியதால், முகத்தில் ஓர சிரிப்பு.

ஒரு கை வைத்து, கண்ணம் தொட்டு பார்த்தான்,
இதமான சூட்டோடு,விரிந்த பூவின் இதழ்போல்
மென்மையாக இருந்தது.
உடல் சிலிரித்து அமர்ந்தான்.
இந்த அசைவு தாழாமல், குழந்தை கால்கள் உதைத்து,
கைகள் முறுக்கி, முகம் திருப்பி, வாய் பிழந்து,
அழ ஆரம்பித்தது.

என்ன செய்வதென்று, தெரியாமல், நடத்துனரை அழைத்தால்,
அவர் கனவுகோட்டையில் கால் பதித்து இருந்தார் .

தேடித் பார்த்து பால் பாட்டில் எடுத்து,
நிப்பிள்  துடைத்து, மெதுவாக, வாயினில் சொருகினான்.
வாய் திருந்து அழும் குழந்தை, நிப்பிளை கவ்வ மறுத்தது.
விரலால் பாலை பீச்சி அடித்து பார்தான்,
நாக்கில் பால் பட்டு, வாய் சப்பியது.
அதோடு சேர்ந்து நிப்பிளையும்  கவ்வியது.

கண்ணில்  வழிந்த  நீர், பேன்ட் நனைத்தது.
மெல்ல மெல்ல பால் குறையும்,
அளவை கண் கொட்டாமல்,
பார்த்துக்கொண்டே இருந்தான்.

இது ஒரு புது அனுபம் ஸ்ரீதருக்கு ,
இது நாள் வரை, எந்த குழந்தையும்,
கையில் கூட தொட்டதில்லை.
ஆனால் இந்த குழந்தை, பால் அருந்தும் அழகை,
இவன் பருகிகொண்டிருக்கிறான்.

இவனரியாமல் பாட்டில் பிடித்திருக்கும் கையின்
ஒரு விரல், அவள் கன்னத்தையும் வருடியது.
ஒவ்வொரு வருடளுக்கும், லேசாக சிரித்தது
அந்த சிற்பம். இவனும் சிரிக்கிறான்,

ஒவ்வொரு வாயசைபுக்கும், இவனும் அசைகிறான்.
சில நிமிடத்தில், பால் குடிக்க மறுத்து, தூங்கி விட்டது.

தூங்கி விட மனமின்றி, இமை விரித்து,
இந்த நாள் பூவை பூஜித்தான்.

காவல் நிலையம் அருகில் வரும் சற்று முன்
குடித்த பாலை, கதக்கியது, அவன் இன்னொரு தொடையில்.
துணிவைத்து வாய் துடைத்து,  பிறகு இவனின்
பேண்டையும் துடைத்தான்.

காவல் நிலையத்தில் குழந்தை ஒப்படைத்து, அதே பஸ்சில்
கிளம்பினான். அதே மூன்று பேர். அதே சீட்.

இனி ஸ்ரீதரின் நிலை....
தூங்கவேண்டும் என்று முயன்றேன், முடியவில்லை.
ஏன்னென்று புரியவில்லை. ஏதோ ஒரு தவிவ்ப்பு.
அடக்கமுடியாத சோகம்.

இது போல் என்றோ ஒரு சமயம் இருந்ததாய் ஞாபகம்.
அன்று என் அன்னை இறந்து கிடந்த தருணம்,
எனக்கோ வயது எட்டு.

இடைப்பட்ட பருவம், நாளை முதல் யார் வீட்டில் இருப்பேன்,
யாரிடம் உணவு கேட்பேன்,
யாரிடம் சண்டை போடுவேன்,
என் தந்தையும் கண்மூடி விட்டார்
என் ஆறு வயதிலேயே,
எனக்கோ அண்ணனோ, தம்பியோ,
அக்காலோ, தங்கையோ இல்லையே,
என்ன செய்வேன், என்று அழவும் தெரியாமல்,
இதை சொல்லவும் தெரியாமல் இருந்த தருணம்.

மனதில் ஆழமாய் துளைத்து இருந்தது,
அத்தை வீட்டில் ஒரு அனாதையாகவே வளர்க்கப்பட்டேன்.

இன்றும் அதே மாதிரியான அனுபவம்.
யாரை தொலைத்தேன், என்று தொடையில் கை வைத்தால், ஈரம்
அந்த மழலையின் கண்ணீர் ஒரு புறம், கதகியது மறுபுறம்.
அதை தொட்டு முகர்ந்து பார்த்தேன்,
மனதின் பாரம் இன்னும் கூடியதாய் உணர்ந்தேன்.

முகமனைத்தும் வெளிச்சம், உற்று பார்த்தால், கரூர்
வந்துவிட்டது. மணியோ அதிகாலை மூன்று.

ஆட்டோ பிடித்து, வீடு வந்து, என்னிடம் இருந்த
சாவியை போட்டு, உள்ளே சென்று. மெதுவாக உடை
மாற்றி, படுக்கை அறைக்கு சென்றேன்.

மனைவியோ, என்னங்க, போன வேலை முடிஞ்சிருசானா?
இல்லம்மா ஒரு புது வேலையோட வந்திருகேனேன்.
ஒ! அப்படியா, சரி சாபிடீனங்கன்னா வந்து படுங்க,
காலையே மெதுவா ஆபீஸ் போங்கண்ணா.

சரி என்று அருகில் படுத்தேன்.
மனழுத்தம் இன்னும் அதிகமாய் இருந்தது.

கனியின் கன்னத்தை, விரல் கொண்டு வருடினேன்,
அதே விரிந்த பூவின் இதழ்போல்
மென்மையாக இருந்தது.................

விழித்து பார்த்த கணியிடம், ஸ்ரீதர் கேட்டான்,
"நாம ஏன் குழந்த பெத்துக்க கூடாது?".........................

Monday, 20 September 2010

ஒசாமா பின் லேடன் (சிறுகதை)

வேலை முடிந்து இரவு நண்பர்களோடு உணவருந்த வந்தேன்,
முருகன் இட்லி கடைக்கு.
எப்போதும் போல தேர்க்கூட்டம்.
நின்று, பிறகு சர்வரை கவனித்து, சென்றோம்.
இது நில், கவனி, செல் மந்திரத்தின் வேறொரு பரிமாணம். மன்னித்து கொள்ளுங்கள்.

சென்று அமர்ந்து, வழக்கம்போல் ஆர்டர் செய்தோம் இட்லியை. வருவதற்கு வெகு நேரம் ஆகும் என்று தெரிந்தும் தேவுடு காத்தோம்.

எப்போதும் சுற்றுவது போல் சுழன்டது என் விழிகள். ஒரு இடம் வந்து கரு விழிகள் கல்லாகின.  அசைத்து பார்க்க முடியவில்லை. யாரை பார்க்கிறது என் கண்கள் என்று யூகித்தால். எதிரே உள்ள இலந்தாரைகளை.

சரி பார்த்துவிட்டோமே என்று கண்களை திசை திருப்பி பார்கிறேன் முடியவில்லை. அந்த கூட்டத்தில் பல பெண்கள், அதில் ஒன்று என்னோடு ஓட்டுவாள் என்று எண்ணியது.

ஏன், எதற்கு, எப்படி புரியவில்லை. மனமின்றி மாற்றினேன் பார்வையை, இப்போது மனது மாட்டிவிட்டது போல்.

பார்த்த களைப்பில் இருக்கும் போது, வந்தது சூடான இட்லி, தொட்டு பார்த்தேன், சூடே தெரியவில்லை, கலர் சட்னியை நாக்கில் இட்டுப்பார்த்தேன், ருசியும் தெரியவில்லை.

ஒ! என்ன இது? இவள் தான் என்னவளோ? திரும்பவும் பார்த்தேன்.

இப்போது நான் (அதாவது ரூபன் அல்ல, கதாசிரியன்) எதிர் டேபிளுக்கு சென்று பார்கிறேன் என்ன நடக்கிறதென்று.

இளம் கண்ணிகள், இனிக்க, இனிக்க பேசிக்கொன்டிருகிரார்கள் காரச் சட்னியை தொட்டுக்கொண்டே. இதில் அஞ்சலி தான் கதையின் நாயகி, ஆகவே நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான கதாபாத்திரம்.

எங்கு சென்றாலும் கூட்டதோடே செல்வாள், அதுவும் இடப்புறம், வலப்புறம் இணை பிரியா  தோழிகளோடு மட்டுமே காட்சியளிப்பாள்.

இனி அஞ்சலி பேசுகிறாள்.....

வேலை சென்று வந்த களைப்பு, இட்லி சுவைத்துக்கொண்டே, சுற்றி பார்த்தால், கண்கள் காந்தம் பார்த்த இரும்பு போல உறைந்து நின்றன, பிறகு நங்கூரம் போட்டன, ரூபனை பார்த்து. மனது மோட்டார் பூட்டிய போட்டு போல் விசிறி விசிறி அடித்து, பின்பு அமைதியானது.

கண்கள் எடுக்காமல் பார்க்கிறாள்,
அவனும் பார்கிறான், சில நொடிகளில்,
அவன் பார்வை அவளை நேர் கொண்டு பார்க்க மறுக்கிறது,
பிறகு அஞ்சலியிடம் வந்தது, பிறகு வேறு பக்கம்,
பிறகு அஞ்சலியிடம், பிறகு வேறு பக்கம்,
பிறகு அஞ்சலியிடம், இந்த விளையாட்டை விளையாட முடியாமல் தவித்தாள், பின்பு சுவைத்தால் புளிசட்டினியோடு.

இருவரும் டின்னெர் முடித்து வெளியே வந்து, பார்வை பரிமாறிக்கொண்டனர், இப்போதும், ரூபன் பாதியிலேயே பார்வையை இடம்மாற்றினான். பையனாக இருந்து இப்படியா வெட்கபடுறது என்று எண்ணிக்கொண்டே நகர்ந்தாள்.

இனி ரூபன் படும் பாடு...........
படுத்து பார்கிறேன், பொரட்டி போட்டது அவள் நினைவு.
இது பசலையோ, இல்லை வயசின் விசமமோ, தெரியாமல் தவிக்கிறேன்.

இரவு 12 மணி தொடும்போது, முடிவு செய்துவிட்டேன் இவளை காதலிப்பேன் என்று, முடிந்தால் திருமணமும்.

உடனே பார்க்கணும் போல் தோன்றிற்று, அட்லீஸ்ட் காதலி நின்ற இடத்தையாவது. முடிவு செய்து காலாற நடந்தேன், தி நகர் மேன்சனிலிருந்து.

பஸ் ஸ்டாண்டில் இரண்டு போலீஸ் தடியோடு தவமிருக்கின்றனர். எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது, நடுக்கத்தை அடக்கி, கடக்க முயன்றேன்.

ஏய் தம்பி மணி என்னாச்சு என்றான் ஒரு போலீஸ்?
பன்னிரண்டு அடிச்சாச்சு என்றேன்.
பரதேசி  நாயி,
என்ன பண்றான் பாரு, அந்த
மரத்துக்கு கீழ நின்றுன்னு குரல் கொடுத்துகொண்டே சென்றனர்,
வேறொரு நாயை பார்த்து.

எனக்கோ உயிர் மீண்டும் வந்தது. இட்லி கடை வாசல் வந்து, காதலி நின்ற இடம் கண்டு மெய் சிலிர்த்தேன். பிறகு சில சினிமா டூயட் களை நினைத்து பார்த்து, திரும்ப நினைக்கும் போது, ஒரு குரல்... என்னப்பா வாழை பழம் வேணாமா தம்பி ? என்றான். இரண்டு தாறும் என்று, ஒன்றை தின்று, மற்றொன்றை என்னவள் தின்கிறாள் என்று சொல்லிக்கொண்டே தின்றேன், ரூம் வந்தடைந்தேன்.

இதே போல் இட்லி, பார்வை பரிமாற்றம், இரவு, வாழைப்பழம் என்று மூன்று வாரம் ஓடியது. இன்று முடிவு செய்து, சொல்ல நினைத்து, அஞ்சலியை நெருங்கினேன், அதே இட்லி கடையில்.

என்னை பார்த்த அஞ்சலி, பதரி எழுந்து நின்றாள், திரும்பவும் என் பார்வை திசை மாறியது.
சொல்லுங்க என்னவேணும்? என்றாள்.
ஒண்ணுமில்ல, உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.
எப்போ?
இப்போவே.
எதப்பத்தி?
என் வாழ்க்கை பத்தி, என் விருப்பம் பத்தி, என் வியாதி பத்தி.
ஹலோ, ஹலோ, நிறுத்துங்கோ! எங்கிட்ட ஏன் இதெல்லாம் சொல்லணும்?
சொல்லக்கூடாது தான், தப்புன்னு தெரியுது, ஆனா வேறு வழியில்லை.
சரி சொல்லுங்கோ.
இங்க வேண்டாம், வெளியே மரத்தடியில், இன்னும் பத்து நிமிஷம் கழித்து என்று நகர்ந்தான்.

அஞ்சலி மனதில் இருந்ததை, ரூபன் உடைத்துவிட்டாதாய் உணர்ந்தாள். சந்தோசப் பட்டாள். பத்து நிமிசமும் பப்ளிக் எக்ஸாம் போல தோன்றிற்று.

மரத்தடியில் ரூபன், காய்ந்த இலைகளை வருடிக் கொண்டிருக்கிறான். அருகில் வந்த அஞ்சலி....
சொல்லுங்க...
ம்ம்ம் என் பேரு ரூபன்.
ஓகே, என் பேரு அஞ்சலி,
தெரியும்.
எப்படி?
கூட்ட்டத்தில் எல்லோரும் பாதி நேரம் அஞ்சலி புராணம் பாடுவது புரியும்.
சிரிப்பை அடகிக்கொண்டே, சரி சொல்லுங்கோ என்றாள்..
சுமார் மூணு வாரமா இங்க வரேன், பார்கிறேன், பூரிக்கிறேன், எப்படி சொல்லுரதென்றே தெரியல. நான் காதலிகிறேன்னு நினைக்கிறன், அழகான முகம், அல்லவைக்கும் சிரிப்பு, விரசமில்லா விழிகள் எனக்கு பிடிச்சிருக்கு.
சோ, சரின்னா கல்யாணம் கூட பண்ணிக்கு வீங்கலோ?

கண்டிப்பா, எனக்கு ஓகே தான்.
சாதி மதம் பிரச்னை இல்லியா?

"சாதி பாக்காத சாதி எங்க சாதி,
மதம்பிடிக்காத மனிதர்கள் நாங்கள்"
அதனால எந்த சாதினாலும் ஒத்துக்கொள்வேன். நீங்க ஒத்துழைச்சா, கைபிடுச்சிடுவேன்.

ம்ம்ம்ம், யோசிகனுங்க.

"ஏன் நான் அழகாயில்லியா?
வார்த்தைகள் தெளிவா வரலியா?
நினைவுகள் நிலையா இல்லியா?"சொல்?

என்னங்க பாரதி போல பாயுறீங்க, கொஞ்சம் அவகாசம் கொடுங்க.

சரி, நான் வெயிட் பண்ணுறேன், ஆனா, இப்போதைக்கு
பேரு மட்டும் தெரிஞ்சுக்கலாமா, ப்ளீஸ்?

ம்ம்ம்ம் அஞ்சலி, அதுக்குள்ளே மறந்துடீங்களா?

உங்க பேரு இல்லீங்க,
கறுப்பா, கலையா, கருப்பு அங்கி போட்டிட்டு இருப்பாங்களே,
உங்க முஸ்லிம் பிரெண்ட் பேருங்க?

ம்ம்ம்ம் ஒசாமா பின் லேடன்!!!!!!!!!!!!!!

Saturday, 11 September 2010

அப்பா எங்கே? (சிறுகதை)

மும்பையில் உள்ள வாஷி (நவி மும்பையின் முதல் பிரிமியர் சிட்டி), அங்கு ஒரு அறுபது மாடி அடுக்கு குடியிருப்பில், நாற்பத்து மூன்று 'டி'  பிளாட் இல், குடியிருக்கிறாள் லோகநாயகி, கணவன் சுகுமார் மற்றும் நான்கு வயது மகள் நிவி.

அன்று காலை 10 : 30 மணிக்கு ரீங்காரமிட்டது கதவின் அழைப்பு மணி. மகள் பள்ளி சென்றுவிட்டாள் சுகுவோடு.

சுகுவும் அலுவலகம் அடைந்துவிட்டதாய் அறிவித்துவிட்டான் எப்போதும்  போல். யாராக இருக்கும் என்ற நினைப்பில் நனைந்தபடி வரவேற்ப்பறை வந்தாள்.

வந்து வெடுக்கென்று திறம்பி முகக்கண்ணாடிக்கு முகம்கொடுத்தால். பார்த்தால்  பார்க்கத் தூண்டும் முகமில்லை என்றாலும், 'பரவாயில்லை முகம்' போல் தோன்றிற்று.

மின்னல் வேகத்தில் விலகியிருந்த முடிகளை விரலுக்குள் வரவழைத்து, காதுக்குள் கவ்வ வைத்தாள்.

மறுமுறை மங்கிய குரலில் மனமின்றி ஒலித்தது அதே கதவு அழைப்பு மணி.

பாய்ந்தடைந்தாள் வாசற்கதவை,
கதவை திறந்தாள்,
இன்னும் அகலமாய் திறந்து,
அவள் கண்களும்.

பிறகு வாய் திறந்து 'அப்ப்பா!!!!!!!!!!!!' என்கிறாள்.
எதிரே நிற்பது, கதர் சட்டை, கதர் வேஷ்டி அணிந்த, திருநீர் இட்ட, சிரித்த முகம் கொண்ட, இவளின் மொத்த சந்தோசத்தின் முழு உருவம் வேலாயிதம்.

உள்ள வாங்க அப்பா, உள்ள வாங்க...என்கிறாள்.
நல்லாயிருகையாடா செல்லம்? பார்க்கணும்போல இருந்தது, அதுதான். என்றார். அடுத்த வினாடியே, அடடா மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் ம்மா, என்று படியை நோக்கி ஓடுகிறார்...

சரிப்பா என்று லோகநாயகி சர சர வென்று வராந்தா செல்கிறாள். சோபாவில் கசங்கியிருந்த துணியை சரிசெய்கிறாள், எரைந்திருந்த நோட்டு புத்தகம், நியூஸ் பேப்பர், ஒழுங்கு படுத்துகிறாள்.

பிறகு முகம் கழுவி, புதுப்பொட்டிட்டு, கதவடைந்து காத்துக் கொண்டிருக்கிறாள்,  அப்பாவிற்காக.......

வெகுநேரமாகியும் வந்தவர் காணவில்லை. யோசிக்கமுடியாமல், கதவை சாத்திவிட்டு, லிப்ட் பிடித்து தரைத்தளம் வருகிறாள்.

வந்து, வாட்ச்மன், வாட்ச்மன், செத்த நேரமும்பு ஒரு பெரியவர் வந்தாரா? என்று தமிழ் தெரிந்த ஒரே வாட்ச்மனிடம் கேட்கிறாள்.
யாரம்மா சொல்லுறீங்க?
அதுதான் பா, கதர் சட்டை, கதர் வேஷ்டி?
ஒ! வேலாயுதும் ஐயாவா? எனக்கு அவர நல்லாத் தெரியும்மா. ஆனா அவரு வரலையே....
இடைமறுத்த லோகு, இல்லப்பா வந்தாரு, உனக்கு தெரியல, விடு....
அட நீவேரம்ம்மா, அவரு எப்ப வந்தாலும், போனாலும், கொறஞ்சது முப்பது ரூவாவாவது கொடுப்பாரும்மா, அதோட குடும்பங்குட்டி பத்தி விசாரிப்பாரு. காலையில ஏழு மணியில இருந்து இந்தப்பக்கம், அந்தப்பக்கம் போற மாதிரியா இருக்கு இந்த அபார்த்மென்டுல வேல,  யார குத்தன்சொல்லி என்ன பண்றது,  எல்லாம் என் தலைவிதீன்னு ராகம் பாட ஆரம்பித்தவனை! 
அட அதை விடுங்கன்னு, உரையாடலை இடையே உருவிவிட்டு  நகர்ந்தாள்.

கையில் மொபைல் இல்லை, அவசரத்தில் மொபைல் எடுத்துவர மறந்துவிட்டாள். ஏறிப்போய் போன் செய்ய பத்து நிமிடம்மாவது ஆகுமே என்பதால், கீழே இருந்த பொது தொலைபேசியிலே கடன் சொல்லி சுகவை அழைத்தாள்.

போனெடுத்த சுகு, என்ன்னம்ம்மா, அதுகுல்லியும்... ம்ம்ம் சொல்லுன்னு பதில் வந்தது.
ஒண்ணுமில்ல சுகு, அப்பா வந்தாரு இப்ப, ஒரு  நிமிசம்ம்ன்னு, கிழே வந்தாரு, எங்க போனாருன்னே தெரியல.
அப்படியா? சரி, நானே திரும்ப கால் பண்ணுறேன், உன் மொபைல் எங்க?
வந்த அவசரத்துல எடுக்க மறந்துட்டேன், நீ இதுக்கே கூபிடேன், வச்சுட்டா!

இருமணிதுளிகளில், சுகுவின் அழைப்பு, என்ன லோகு, அப்பாவும், அம்மாவும் பல் டாக்டர பார்க்க பந்திர குர்ர்லாவுல காலை ஒன்பது மணியிலிருந்து இருக்காங்களாமே?
ஹே, சுகு, அப்பான்னு சொன்னது, எங்க அப்பாவ, மாமாவ இல்லை!
ஒ! சாரி..வச்சிடு கூப்பிடுறேன்.

மாமாவின் மொபைலுக்கு அழைக்கிறான் சுகு.
பல ரிங்குகள் போய், கால் எடுத்தார்.
அவர் குரல் கேட்டகவில்லை. ஒரே லாரியும், பஸ்சும், ஜனங்களின் சத்தமும், ஒய் ஓய்ந்னு ஏதோ சத்தமும், முருகன் கோயில் பக்தி பாடல்களுமே கேட்கிறது, வெகுநேரமாகியும் எவரும் பேசுவாரில்லை.

காலை துண்டித்து, லோகுவிற்கு அடித்தான், விளக்குகிறான்.
லோகு சொன்னாள், எங்கப்பா எப்பவுமே இப்படித்தான், காலை எடுக்கத் தெரியாது, சில சமயம் எடுப்பார் ஆனால் எடுத்த கால், கட்டாகி விட்டது என்று நினைத்து மேல் பாக்கெட்டில் போட்டுக்கொள்வார்...இது வாடிக்கை என்றாள்.

மொபைலில் பேசிக் கொண்டிருக்கும்போது இடை மறுத்த, குசும்பு குமார் (சுகுவை வெறுப்பேற்றும் ஒரே நண்பன், பள்ளி ஆரம்பித்து அலுவலகம் வரை பின்னே தொடர்கிறான் ஒரு இருபத்து  ஏழரை நாட்டு சனி போல).
என்ன சுகு என்னாச்சு?
ஒண்ணுமில்ல மச்சி, மாமாவ காணம்கிரா உன் தங்கச்சி!
யாரு லோகு அப்பாவா?
ஆமாண்டா.
அவர கொஞ்ச நேர முன்னாடி தான் 'வாஷில' உங்க வீட்டு பக்கத்தில் உள்ள அமர் ஜெவ்லேரி வாசல்ல பார்த்தேன், சாயங்காலம் ஆத்துக்கு வா பேசலாண்டா அம்பினார்.
ஒ! அப்படியா. சரி டா, தேங்க்ஸ்.
ஹே லோகு, கேட்டியா, குமார் சொன்னத?
ம்ம்ம் சுகு, கேட்டேன். இப்போ தான் நியாபகம் வருது, அம்மா சொன்னா, நிவியோட அஞ்சாம் பர்த்துடேவுக்கு ஒரு பவுன் சங்கிலி போடுறதா இருந்தாளாம். அதுக்க்கு தான் இப்படி ஒடுனாரா, எங்க அப்பாவ திருதாவே முடியாது!

சரி சுகு, நீ வந்து இப்போ அமர் ஜெவேல்ரிக்கு வரியா ப்ளீஸ்... நாமும் சேந்து செலக்ட் பண்ணுவோம் நம்ம குட்டி பிசாசுக்கு?
சரி வந்து தொலையிறேன், லாப வேலையாச்சே.

லோகு அபார்ட்மென்ட் ஆட்டோவில் ஏறி அமர் ஜெவ்லேர்ஸ் செல்கிறாள்...அப்போது அவள் வீட்டு போனும், மொபைலும் மாறி மாறி அலறி,
பிறகு அமைதியானது.

அதே சமயம் சுகுவும் மொபைலை சுவிட்ச் ஆப் செய்தான். வேலை நேரத்தில் வெளியே சென்றால் சுவிட்ச் ஆப் செய்வது வழக்கம்.

இருவரும் நகை கடை வந்து சேர்ந்தனர். ஆனால் கடையில் அப்பாயில்லை, விசாரிப்புகளும் விளக்கவில்லை.

ஒன்றும் புரியாமல், மொபைலை  ஆன் செய்தான். அதில் மூன்று வாய்ஸ் மெய்ல்கள். முதலாவதை தேர்வு செய்து காதில் வைக்கிறான்.
குமாரின் குரல்....
'ஏப்ரல் மாசத்துல பூல் பண்ணுவது அந்த காலம்,
நேரம் பாத்து நோகடிப்பது இந்த காலம்......ஹிஹிஹிஹி'
சுகுவின் கருத்த முகம் சிவந்தது...பின்பு சீரியசும் ஆனது.

என்ன லோகு வேலை நேரத்துல அப்பா வந்தாரு, ஆட்டுக்குட்டி வந்தாருன்னு, எரிச்சலமூட்டுற....
சுகு, கோவப்படாம எங்க வீட்டுக்கு ஒரு தரம் கால் பண்ணு ப்லீசுன்னு கண்ணம் தடவினா.

'அடிக்க அடிக்க அம்மியும்  நகரும்,
தடவ தடவ(சுண்ணாம்பு) நாக்கும்  சிவக்கும்..'  என்ற தலையணை மந்திர வித்தை, சுகுவை சுக்குநூறாக சிதைத்து, மீண்டும் அவன் முகம் கருத்த முகமாயிற்று.

இப்போ நான் என்ன லோகு பண்ணனும், சொல்லு????......சுதாரித்து சரி சரி போன் பண்ணுறேன்னு, லோகு வீட்டுக்கு கால் செய்தான்.

ரிங் ஓயாமல் அடிக்கிறது, எடுத்து பேச ஒரு துடுப்பு கூட இல்லை.  கடுப்பாகி மணி பார்த்தால்... மணி 11 : 30 .......

சுகுவின் மொபைல் சிணுங்குகிறது,
அழைப்பு வந்தது.
வந்த அழைப்பு திருச்சியில் உள்ள ஒரு
அரசு மருத்துவமனையிலிருந்து.

சொன்ன செய்தி,
சுமார் 10 : 25 க்கு ஒரு மோட்டார் விபத்தில்
அகால மரண மடைந்தார்,
வேலாயிதமென்று!!!!!!

Sunday, 5 September 2010

அன்னாடங் காட்சி

மாருகழி மாசத்துல,
கொங்கணகிரி கட்டுக்குள்ள,
கூர போட்ட குடுச வீடு.

குடுசக்குள்ள கருப்பாயி,
கட்டிக்கிட்ட ராசுக்கவுண்டன்,
பெத்துக்கிட்ட ரெண்டு வயசு தங்கராசு.

கொக்கரக்கோவுன்னு கூவுது,
கொண்ட சேவலு.

எந்திரிச்ச ராசுக்குட்டி,
அக்கட்ட வச்சான்,
ஓலப்பாய.

ஓலபாயி ஓலம்கேட்டு, கவுந்திருந்த
கருப்பாயி, அள்ளி முடிஞ்சா சிண்டு முடிய.

தேக்குசாவுல தண்ணி மொண்டு,
கொப்புளுச்சா நாற வாய.

செங்கபொடிய கையில போட்டு,
இந்தல்ல, அந்தல்ல தேச்சு துப்புணா.

ராசுகுட்டியோ வேப்பன்குச்சிய,
மென்னு துப்பிணான்.

பிரிசனும், பொஞ்சாதியும்,
கக்கிசுக்கு கம்மாயோரம்,
ஒதிங்கினாங்க.

வானம் வெளுத்து போச்சு,
பச்சிகளெல்லாம் பறகிடளாச்சு

பொடக்காலி போயி ரவிக்கை சீள
கழட்டி, மேலுக்கு தண்ணி வாக்கிறா,
தட்டிவச்ச கதவுக்கு பின்னாடி.

ராசுகுட்டியோ  கெணத்தடியில,
குத்தவச்ச வாக்குல குளியல போடுறான்.

மாத்துத்துணி இல்லாம, உடுத்துண
துணிய, ஊறவச்சு, தொவச்சு,
மரத்துல மாட்டி, உடம்புல சுத்தி,
ஒனத்துரா, ஈரத்துணிய.

இனி இவங்க உரையாடல்............

அட கூறுகெட்ட அம்முணி,
நேரமாச்சு வயக்காட்டுக்கு,
என்றகூட வர்றியா? வல்லியா?
சொல்லிப்போடு  அம்புட்டுதான்.

ஏனுங்க மாமோ, எகத்தாளம்
வேணாமுங்க, அவகாசம் கொஞ்சங்
குடுங்க, ஆக்கித்தள்ளி போட்டு
கிளம்பிடுவோம்.

அடுப்படிக்கு போறா கருப்பாயி.....
அரிசியில்ல கலயத்துல,
கா கையி சோழ அரிசி
செதரிகிடக்குது சொம்புக்குள்ள.

பானையில தண்ணி ஊத்தி,
சோளச்சோறு பொங்கி போட்டா.

கொழம்புக்கு வேலி போயி,
சுக்கிட்டி கீரைய கில்லி வந்தா.

வானலியில கீரையிட்டு,
மத்தால கடஞ் செடுத்து,
கல்லுப்பு கொஞ்சம் போட்டு,
எறக்கி வச்சா.

வடிச்செடுத்த சோளச்சோறு,
காவயிறு காங்காதே,
பச்ச கொழந்த பசிகலுதா,
என்ன செய்ய மாமா?

கவுண்டன்கிட்ட காசு வாங்கி,
ரவைக்கு அரிசி சோறு பொங்கி
போட்டு, தங்கராச வயிர
குளிர  வைப்போம்.

நீசுத்தண்ணிய கரச்சுகுடிச்சு,
வயிறு நெறச்சு, பொரபுடுறாங்க
வேல வெட்டிக்கு.

எப்பவும்போல் தங்கராச முத்தம்
கொடுத்த கருப்பாயி,
இடி விழுந்த கரண்டு கம்பம்போல,
ஐயோன்னு கூவிப்போட்டா.

கோவம்கொப்புலுச்ச ராசுகுட்டி,
கெரகும்புடிச்ச கிறுக்கி சிறுக்கி,
என்னாச்சு சொல்லிபோடுன்னான்....

குழந்த மேலு அணாலக் கொதுகிது,
மச்சான். எனக்கு வகுத்த கலக்கி,
வேதியில போற மாதிரி இருக்கு
மச்ச்சான்னா....கருப்பாயி.

கழுத்துல கைய வச்ச ராசுக்குட்டி,
வெடுக்குன்னு எடுத்து,
ஐயையோ புள்ள, இப்படியொரு,
மகராசன் மேல்சூட்டை எந்த
செம்மத்துளையும் பாத்ததில்லியே.....

கம்போண்டருக்கு கூட்டி போவம்,
காச்சல் என்னன்னு  கண்டுபுடிப்போம் மச்சான்.

சுருக்கு பைய தேடிப்பாத்து,
சுருட்டி வச்ச அஞ்சு ரூவா தவிர,
சல்லிக்காசு சாத்தியமில்லைனான்.

ஆயி அப்பன் தவிச்சு கெடக்கையில,
ரோசனை ஒன்னு உதிச்சுது,
ராசுக்குட்டிக்கு.

கருப்பாயி, நான்போயி முக்குகடையில,
மூணு ரூவாய்க்கு மாத்திர வாங்கி,
அதோட பாயி கடையில வரக்காபி
வாங்கியாறேன்.

நீ தங்கராச தட்டிகொடுத்து,
ஊத்தியுடு வாயுக்குள்ள.

வேலைமுடிஞ்சு  வந்து,
காசோடு கம்போண்டுர கண்டுபுடலாம்.

அர மனசோட அம்முணி சரீன்க்ரா,
மாத்திர ஊத்தி கொடுத்து,
வயலுக்கு வரா.

ஆறு மணி நேர வேலையில ஆறாயிரம்
தரம் தங்கராச தர்ப்பணம் பண்றா.

வேல முடிஞ்சு, கூலி வாங்கி, ஓடுறாங்க
ரெண்டுபேரும் தங்கராச தேடி.

கெடச்ச பணம் எம்பது ரூவா, இதுல
செட்டியாருக்கு முப்பது, அரிசி பருப்பு
வாங்க முப்பது, கம்போண்ட்ருக்கு இருபதுன்னு,
கணக்கு போட்டு குடுச வந்தாங்க.

மண்டி போட்டு மவராசன தொட்டு பாத்தா,
சந்தோசம் முகமுழுசும்.
கொண்டாதம்மனுக்கு மொத கும்புடுன்னா.

என்னாச்சு கருப்பாயி?
ஐசா இருக்குது மச்சான், மேலு.
ஐயபடத் தேவையில்லைன்னா...
ராசுகுட்டிக்கும் சந்தோசம்.

கையில கொஞ்சம் கருப்பட்டி எடுத்து,
எழுப்பி விட்டு ஊட்டி பாத்தா,
எழவுமில்ல, உண்ணவுமில்ல,
தட்டிபாத்தா, உலுக்கி பாத்தா,
பிரயோசனமில்ல.

என்னபெத்த ராசா, என்னபெத்த ராசான்னு,
ஒப்பாரி வச்சா, ராசுகுட்டியோ
நாடிபாத்து வெலகி நின்னான்.

சத்தங்கேட்ட  செல்லாத்தா, சுப்பாத்தா,
அவனாசிகார அய்யன், சின்ராசு ஓடிவந்தாங்க,
கருப்பாயிக்கு உசுரு போனத உணர
வச்சாங்க.

அட கொல்லையில போற மச்சான்,
அனாத பொனமாக்கினியே ஆசை
மகராசன. வயசு கூட ஆகிலியே,
வந்த வழி போக வச்சியே.
உனக்கு நல்லசாவு வந்திடுமோ,
காசுவெட்டி போட்டிடுவேன்,
கண்ணிமாறு கோயிலிலேன்னு
மாறடிச்சா.

எம்பது ரூவா வச்சு,
ஈமக்கடன் முடிச்சாங்க.

மறுநாள் காடு சென்று,
வயக்காடு சென்று, விட்ட
வேலையை தொடங்கினாங்க,
 அன்னாடங் காட்சியை அரங்கேற்ற................