Saturday, 11 October 2014

அறுபது வயது குடு குடு கிழவன்

நடுத்தர வர்க்கம்,
போராட்டமான வாழ்க்கை,
தூக்கி விட, தடவிக் குடுக்க
யாருமில்லை.

ஆடலையும்,
பாடலையும்,
காதலையும் நுகர்ந்தது
சினமாவில் மட்டும் தான்.

முட்டி மோதி,
கற்றுத் தேறி.
முடிந்த வரை,
ஞாய வழியில் சென்று.

வேலையும் வாங்கி,
நிம்மதிப் பெறுமூச்சு விடுவதற்க்குள்,
அடுக்கடுக்காய் குடும்பச் சுமைகள்,
குழுமி நின்று கழுத்தை நெருக்கியது.

உடன் பிறந்தோர் நிலை உயர,
அலுவலகத்தில் அடைபட்டுக்,
கரைந்தேன்.

முதிர் கண்ணனாவதர்க்குள்,
கனாக் கூட காணாமல்,
கரம் பிடித்தேன்.

இருக்கப் பட்டவனுக்கே,
ஆசை அறுபது நாள்.
எங்களைப் போன்றோருக்கு,
ஆறு நாள் ஆசை இருந்தாலே அதிகம்..

ஊதியம் பெருக,
அறிவை பெருக்கி.
குடும்பச் சுகத்தை பின் தள்ளி.

உயர் பதவிகளே, உயிரென மதித்து.
அலுவலக இலட்சியத்திற்காக
பாடு பட்டு.

திறமையானவன் என பெயருமெடுத்து.
ஒரு நாள், ஒய்வு பெற்றேன்.

இன்று விடிந்தும், விடியாமலும்,
சிறு நீர் சீற்றம்,
என்னை சித்திரவதை
செய்யத் துடங்கியது.

மங்கிய கண்கள் கொண்டு,
நான்காவது முறை ஜன்னல்,
திரையை விலக்கிப் பார்த்தேன்.

இவ்வளவு நேரம் கண்ணாம்பூச்சி
ஆடிக் கொண்டிருந்த சூரியன்,
இப்போது அகப்பட்டுவிட்டான்.
ஆம் விடிந்து விட்டது.

இனி நான் எழுந்தாலும்,
நடந்தாலும், விழுந்தாலும்,
பிறர் தூக்கம் தடை படாது!

வலுவிழந்த வலதுகையை,
மெதுவாக பின்னிழுத்து,
கைமூட்டை படுக்கையில் ஊன்றி,
உடல் தூக்கி, ஒட்டிக்கிடந்த
கால்களை அசைக்கப் பார்த்தேன்,

ஏனோ அசைய மறுத்து,
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.

தட்டி எழுப்ப இடது கை தூக்கும்போது,
கோபப்பட்ட வலது கை மடித்துக்கொண்டு,
என்னை குப்புறத் தள்ளியது.

இதை ஜன்னல் வழியே,
கண்டு கொண்ட சூரியன்,
குலுங்கி குலுங்கி சிரித்து,
என் கண்களை கூசியது.

அறை மணி நேரப்
போராட்டத்திற்க்குப் பின்- அசைந்தது
என் இடது கால்.

அசைத்து அசைத்து இரண்டு,
கால்களையும் கட்டிலுக்கு
வெளியே தள்ளினேன்.

மடித்திருந்த வலது கையை,
உள்ளங்கை கொண்டு நிமிர்த்தி,
தலையாட்டி பொம்மைபோல்,
விசிறி அமர்ந்தேன்.

இந்நேரம் கால்கள்,
தரை பதிந்திருக்கும் என்று
நம்புகிறேன்.

கண்ணாடி எடுக்க வளைந்தபோது,
முதுகெலும்பு மடங்க மறுத்தது,
மரண வலியை முழுங்கிக் கொண்டு,
எடுத்துவிட்டேன்.

ஏனோ கண்ணாடி அணிந்தும்,
பார்வையில் மாற்றம் காண முடியவில்லை.

அருகிலிருந்த நடை பழக்கியை,
தர தரவென இழுத்து கொண்டேன்.

இரு கைகள் பற்றி எழ
முயன்றேன், பலனில்லை.
மூன்று முறை தொடர்ந்தேன்,
அதே நிலைதான்.

யோசித்தேன்...
புரிந்துவிட்டது.
என் வலது கால் பாதம்,
இடதுகால் மேல்,
சுயநினைவின்றி,
சிலுவையில் அறையப் பட்டதுபோல்
சிக்கிக் கிடந்தது.

பக்குவமாய் பேசிபேசி,
ஒட்டிக் கிடந்தவரை பிரித்துவிட்டேன்.

சிறுநீர் சீற்றம் கொஞ்சம்,
கொந்தளித்தது.

அவசரமாய் எழ முயன்றேன்,
முகத்தில் மட்டுமே அவசரம் தெரிந்தது,
உடல் உரல்போல உறுதியாய்
உறைந்திருந்தது.

எப்படியோ, தட்டுத்,
தடுமாறி, தவழ்ந்து,
குனிந்த படி நடை பழகியை
கட்டியபடி நின்றேன்.

இடது மூட்டில் ஈட்டி
ஒன்று பாய்ந்தது.
பல்லைக் கடித்துக்கொண்டேன்.

வலது காலோ வலுவிழந்து,
சரியத் தொடங்கியது.
இடது கையால்,
முட்டுக் கொடுத்து பார்கிறேன்.

பட படவென வலது புற எலும்பு,
துடி துடிக்க ஆரம்பித்தது.

உடல் முன்புறம் வளைய வளைய,
தரையில் விழுந்து விடுவேனோ என்ற பயத்தில்,
கைகள் கொண்டு பின்புறம் ஒரே
தள்ளாய்த் தள்ளி, படுக்கையில் விழுந்தேன்.

விழுந்ததில்,
கட்டில் தலைமாட்டில்,
பின் தலை மோதி,
வலி தாங்காமல் வாய்
திறந்து கூவிவிட்டேன்.

ஆறு மணிக்கு அயர்ந்து இருந்த மகன்,
அப்பாவென்று ஓடி வந்தான்.

வலுக்கட்டாயமாக தண்ணீர் குடுத்து,
என்ன வேண்டும் என்றான் -கோபத்தை
அடக்கிக் கொண்டே.

சிறுநீர் என்றேன்!
தோல் கொடுத்து,
தூக்கி விட்டு,
நிற்க்க வைத்தான்.

தத்தி தத்தி நகர்ந்தேன் -நடை
பழக்கியோடு.

பாத்ரூம் நெருங்குவதற்குள்,
இடைமறித்து, மாமா என்ன ஆச்சு என்றாள் -என்
மருமகள்.

எடுத்துரைப்பதற்குள் ,
மூத்திரப்பை வீங்கி,
அடக்க முடியாமல்,
தொள தொள டிராயரை,
நனைத்துக் கொண்டு,
தரையில் படர்ந்தது சிறுநீர்.

அவமானத்தை மறைக்க,
கூனிக் குறுக்கி,
குழந்தை போல் சிரித்தேன்......

அப்பாவுக்கு வயசாகிடிச்சுங்களா?

சதா வேல வேலன்னு
சுத்துறேங்க!
கெடைக்கிற சொற்ப நேரமும்
பொண்டாடி புள்ளன்னு போயிடுதுங்க!

திடீருன்னு எங்க அப்பா
நியாபகம் வரவே,
யோசிச்சேங்க!

நெறைய சிரிச்சேனுங்க,
கொஞ்சம் கறஞ்சனுங்க,
மனசு நெரஞ்சிடிசுங்க - அனாலும்
ஒரு கேள்வி உதிசிச்சுங்க,
உங்களாள முடுஞ்சா
பதிலா சொல்லுங்க!

குட்டி நகரமுங்க,
அதிலொரு குட்டி வீடுங்க!
வீட்டுக்குள்ள,
எங்க அப்பனும், ஆத்தாளும்
குடித்தனம் நடத்தினாங்க!

பஞ்சமும் பட்டினியும்,
பத்ரகாளி ஆட்டம் ஆடுஞ்சுங்க!
பதறியும் கதறியும்,
பொழப்ப ஓட்டினாங்க !

மாசமான எங்காத்தா,
பாரம் பொறுக்காம
என்ன பத்தாவது மாசத்துல,
எறக்கி வச்சாளுங்க!

ஏறக்கிய பாரத்த,
மாறுள மாட்டிகிட்டார்
எங்க அப்பனுங்க!

பொறந்த வுடனே,
கொஞ்சிக் கொஞ்சி நான் அழுதேன்.
அதப் பாத்த எங்க அப்பா,
ஆகாசச் சிரிப்பு, சிரிச்சாருங்க!

சிரிப்பு சத்தம் காதுல கேட்டு,
குலுங்கி குலுங்கி அழுதேனுங்க!
எங்க சிரிப்ப நன்கு ரசிச்சேனுங்க!

ஆசையாய் தூக்குவாரு ,
அள்ளிக்கிட்டே ஓடுவாரு,
ஆட்டமா ஆடுவாரு,
பாட்டும் கூட பாடுவாரு,
பச்சக் கொழந்தையை - கொழு
பொம்மையாக்கி விளையாடுவாரு,

சிலநேரம் கசக்குவாரு,
கில்லுவாரு,
முடியப் புடிச்சு இழுப்பாரு,
பேய்போல கத்துவாரு,
கையை புடிச்சு அழுத்துவாறு,
காலால லேசா உதைப்பாரு,
கோபமூட்டி, கோபமூட்டி கலங்கடிப்பாரு - இருந்தாலும்
அவரே என் உலகமுங்க!

தவலத்தெரிந்த நான்,
முதன் முதலில் எழுந்து நின்ற போது,
என்னைச் சுற்றி சந்தோஷத்தில் ஆடினாருங்க!

நடை பழகும் போது,
யானையாய் மாறி என்னை
துரத்துவாருங்க!

நான் வலி தாங்காமல் அழும்போது,
வேதனையை மனதில் அடக்கி,
என்னை பார்த்து சிரிப்பாருங்க!
வலி மறந்துபோய்,
வெகுளியாய் சிரிப்பேனுங்க!

கொஞ்சம் வளர்ந்த பின்பு,

பாடிக் கொண்டே எழுப்புவாருங்க,
சீண்டிக் கொண்டே பல் துலக்கி விடுவாருங்க,
குஷி குறையாமல் குளிக்க வைபாருங்க,
அம்மாவை சோறு ஊட்டச் சொல்லி,
கதை சொல்லுவாருங்க.

என் மேனி நோகாமல்,
மிதி வண்டியை,
அவரு மேனி நோக,
மிதிச்சு மிதிச்சு பள்ளியில விடுவாருங்க!

வசதி வந்தபோதும்,
என்னை வட்டதுகுலே வச்சு,
வளத்தாருங்க!

பள பளக்கும் வெட்டி கட்டி,
வீதியே பார்க்கும் படி,
வெறப்பா நடப்பாருங்க!

பழைய சோறு காலை உணவுங்க,
கறிக்கும், மீனுக்கும் ஏங்காத வருங்க!

சக்கர மேல அதிக
அக்கறை உண்டுங்க!
இனிப்புன்னா கொஞ்சம் இழுத்துப்
போட்டுத் திம்பாருங்க!

காரத்த காட்டினா,
கடுப்புல துப்பிடுவாருங்க!

கொழந்த புள்ள மாதிரி,
கேக்கும், பிஸ்கட்டும்
தேடித் தேடி கொறிபாருங்க!!

என் திருமணத்துல கூட,
மாப்புள்ள மிடுக்கோடு
சுத்தினாருங்கோ!

பேரன் பேத்தி பிறந்தாலும்,
தாத்தாவ மாறுலீங்க!

ஆனா இப்ப ஏனோ,
லேசா சோர்ந்து டாருங்க !

நடையில தளர்ச்சீங்க,
பார்வையில கூர்மையிலீங்க,
நய்யாண்டி கானுலேங்க,
நக்கலாய் பேசி நாளாகுதுங்க,
ஆட்டம், பாட்டமும்
அறவே கொரஞ்சிடுஞ்சுங்க,

ஒரு வேல,
எங்க அப்பாவுக்கு
வயசாகிடிச்சுங்களா?

பிறந்தநாள் பரிசு

எத்தனையோ பிறந்தநாள்கள்
கடந்தாகிவிட்டது.

எத்தனை எத்தனையோ
பரிசுகளும் பெற்றாகிவிட்டது.

ஆனால் இந்த முறை,
மனைவி தந்த பரிசு
மிரளச் செய்தது.

என்னை நான் இன்னும்
புரிந்துகொள்ள,
ஒரு புத்தகத்தை பரிசளித்தாள்.

புத்தகத்தை எழுதியவர்கள்
சுமார் நூற் பேர்.

எழுதியவர்களுள்,
பள்ளித் தோழர்கள்,
கல்லூரி நண்பர்கள்,
அலுவலக அன்பர்கள்,
முகபுத்தக சகாக்கள்,
அக்கம் பக்கத்தினர்,
என் உறவுகள்,
தூரத்து உறவுகள்
இன்னும் சிலரும் அடக்கம்.

செய்திகளை திரட்டியது என்னவள்,
எழுதிப் பதியவைத்தது என் தந்தை.

நேசக் காகிதங்களால்,
பாச மையூற்றி,
பந்தப் பேனாவில் எழுதி,
உறவுச் சங்கிலியால் தைத்து
உருவாக்கி இருந்தனர்
இந்த புத்தகத்தை.

நேசமானவர்களின் பங்களிப்பை
கண்டு நெகிழ்ந்தேன்.

நான் நியாயமானவன்
என்கிறான் ஒரு நண்பன் - அவனுக்கு
தெரியாது நியாயமானவர்களுக்கு
அநியாயக்காறாக்கள் நண்பர்களாய்
இருக்க முடியாதென்று!

மிகப் பொறுமைசாலி
என்கிறாள் ஒரு தோழி - அடித்
தோழியே, தோழமையில் ஆத்திரமாவது,
அவசரமாவது ஏதடி?

அன்பானவனாம்!
உங்களின் துன்பங்களிலும்
அன்பை வாரி இறைத்ததால்
ஆக்ரோஷ அரிதாரம்,
தரிப்பது சாத்தியமா?

சிந்தனைவாதி என்றார்
ஒரு அலுவலக நண்பர்.
அலுவலக நேரங்களிலும்
செவி குடுத்த உங்களின்
உள்ளமே என் சிந்தனையின் ஊற்று.
மறந்துவிடாதீர்!!

பிறர் மனம் நோகும் படி,
வார்த்தைகள் உதிர்க்காதவனாம்.
எனக்கு பிடிக்கவில்லை என்பதைக் கூட,
உங்களுக்கு பிடிக்கும்படி கூறும்படி
பார்த்துக்கொள்வேன்.
அவ்வளவே!

சிரித்த முகமாம்!
நான் பழகும் அனைவருமே,
மனித நேயம் கொண்ட
மனிதர்கலானதால்,
சிரித்தபடி திரிகிறேன் போலும்.

வயதான ,பெரியப்பாவின்,
பல்லாண்டு வாழ்க செய்தி
என்னை ஏதோ செய்தது.

ஒன்று விட்ட அக்காள்,
வேலைக்குச் செல்வது - நான்
கொடுத்த உற்சாகமென்று
அறிந்து கொண்டபின் - சற்று
கரைந்து போனேன்.

ஒன்றாய் வளர்ந்த
ஒன்று விட்ட அண்ணன்கள்
என்னை பற்றி உயர்வாய்
சொன்ன பொது - கொஞ்சம்
சிவந்துபோனேன்.

மைத்துனர்களின்
மயிர்கூச்சரியும் வார்த்தைகளால்,
மயங்கி நின்றேன்.

மச்சினிச்சியின்
உருக்கமான வார்த்தைகளுக்கு
உண்மையாய் இருப்பேன்.

எப்போதும் வாழ்த்துவது போல்
இப்போதும் வாழ்த்தும் - என்
சித்தியின் வாழ்த்துக்களால்
இன்னும் வெகு தூரம் செல்வேன்.

மூன்றாவது மகனென்று சொன்ன
அத்தையின் வார்த்தைகள் - எனக்கு
கூடுதல் பொறுப்புகள் உள்ளதை
புரியவைத்தது.

நான் அவளின் இன்னொரு
தந்தையென்று சொன்ன - என்
இரண்டாவது தங்கையின்
வார்த்தைகளை பார்த்து,
உருகிப் போனேன்.

நானே அவளின் குழந்தைகளின்
வழிகாட்டி என்று சொன்ன - என்
முதல் தங்கையின் நம்பிகையை
நியாயப்படுதுவேன்.

எனக்கு உயிர் கொடுத்த,
அப்பாவின் உயிரோவிய
வார்த்தைகள் - என்னை
புத்தம் புதிதாய் பூக்கச் செய்தது.

நானே அவளின் சந்தோசமென்று,
உரு கொடுத்த அம்மாளின்
சந்தோசத்தை நீட்டிக்கச் செய்வேன்.

அப்பானாலே ஜாலி
தான்னு குதிக்கும் - என்
மகளின் ஜீவ காந்த
சக்தியை பேணிக் காப்பேன்.

இதை அரும்பாடுபட்டு,
சேகரித்த என்
அருமையானவளுக்கு - நான்
இன்னும் அருமையானவனாய்
திகழவேண்டும் என்று புரிகிறது.

வாழ்த்து செய்தியும்,
கருத்துகளும் பகிர்ந்து கொண்ட,
அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும்
நன்றி.