உயிருக்கு உயிரானவன்,
உன்னதமானவன்,உறங்கிப்போனான்.
பூமிப் பந்தில்,
விளையாடி, விளையாடி, ஓய்ந்து.
விண்ணுலகில் குடி புகுந்தான்.
மறுஉயிரை ஒரே
ஒரு முறை, ஆரத்தழுவ,
என் ஆத்மா, எறி தணலில்,
எரிந்து கொண்டிருந்தது.
வழி ஏதுமுண்டோ,
என் இறந்துபோன இனியவனின்,
மூடிய விழிகளை திறந்து பார்க்க?
உண்டு என்பதுபோல் வலைதளம்,
வண்டி வண்டியாய்,
வழிகளைத் துப்பியது.
துப்பியவற்றை துப்பு துலக்கி,
ஒரு முறையை தேர்வு செய்தேன்.
இதுகால் ஆவிகளை
அழைத்துப் பேசலாம்,
புரியாததை புரிந்துகொள்ளலாம்.
இந்த மூன்று மாதங்களும்,
பல முறை முயன்று பார்த்தேன்.
முயற்சிக்கும்போது,
சில நேரம் படுக்கையிலிருந்து,
வீசி எரியப்பட்டுள்ளேன்.
மின் விளக்குகள் அனைந்துள்ளன,
இடியுடன் கூடிய மழை,
பெய்திருக்கிறது.
பேனா எழுதுவதை நிறுத்தியுள்ளது.
குளிர் ஜுரம் கண்டுள்ளேன்.
பல மாதிரி சத்தம் கேட்கப்படும்.
நானே பலகுரலில் கத்தியுள்ளேன்.
அமுதா அமுதா என்று
என் பெயர் ஒலிக்க கேட்டுள்ளேன்.
இருந்தும் என்னவனை
மட்டும் ஈர்க்க முடியவில்லை.
நடக்கும் அனைத்தையும்
எங்கள் பொது நண்பனிடம்
சொல்லுவேன்.
மெளனமாக கேட்டபின்,
பேய் போல் சிரிப்பான் ரவி.
ரவிக்கு சாமி, சாமியார்,
பேய், நம்பூதிரி,
ஆவி, மறுஜென்மம்,
போன்ற எதையும்
நம்பாத நாஸ்திகன்.
ஆனாலும் நல்லவன்,
தன்னலமற்றவன், அழகானவன்,
அன்பானவன், பாடகன்,
பலகுரல் மன்னன்,
தேக ஆரோகியம் கொண்டவன்,
தெளிவானவன்,
பார்பவர்களை வஸ்யம் செய்யும்
வதனமுடயவன்.
ரவிக்கு நாங்கள் இருவர்
தான் உன்னத உலகம்.
அதுவும் சாலை விபத்தில்
சாய் இறந்த பிறகு,
என்னோடு இன்னும் இனக்கமானான்.
கடந்த ஒரு வாரமாக
கடுமையான விரதமிருந்து,
அமாவாசையான இன்று
மேலுமொரு முறை முயற்சிக்க
ஆயத்தமானேன்.
தவறாக அரங்கேறினால்,
சில கெட்ட ஆவிகள் தரிசித்து,
தும்சம் செய்துவிடுமாம்.
ஆகவே துணைக்கு
ரவியை அழைத்தேன்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டே,
சற்று யோசித்த பின், சிரித்துக்கொண்டே
சம்மதித்தான்.
இரவு பத்து மணிக்கு ரவியும்
வந்தான்.
வீட்டை சுத்தாமாக பெருக்கி,
துடைத்து, சாணம் கொண்டு மெழுகி,
குளித்துவிட்டு, முகமுழுதும்
மஞ்சள் பூசி, குங்குமத்தில்
பெரிய பொட்டிட்டு,
காவி நிற ஈர பொடவை
கட்டிக்கொண்டு அமர்ந்தேன்.
எதிபுறத்தில் ரவி அமர்தான்.
மெழுகுவர்த்தி, ஏற்றிய திரி விளக்கு,
கற்பூரம், விபூதி, தேங்காய்,
சொம்பு நிறைய தண்ணீர்,
தீப்பெட்டி, ஊதுபத்தி,
ஒரு காலி சில்வர் டம்பளர்,
மற்றும் சாயின் புகைப்படம்
கொண்டு பூஜை ஆரம்பித்தேன்.
மணியோ இரவு 11 :30 ,
அமாவாசை இரவு,
வீட்டின் வெளியே கும் இருட்டு,
வாசர்கதவும், ஜன்னல்களும் திறந்திருந்த
வண்ணம், முதல் சடங்கை ஆரம்பித்தேன்.
ஒரு கரித்துண்டு கொண்டு,
தரையில், A ,B , C , z வரை
வட்டமாக எழுதி,
இடதுபுறம் சரி என்றும்,
வலதுபுறம் தவறு என்றும்
எழுதி, ரவியை பார்த்தேன்
சிரிக்காமல் சிலையாய் இருந்தான்.
கையில் புகைப்படம் எடுத்து,
புஸ்தகங்களில் சொன்னது போல்,
ஜபித்தேன், என்றுமே இல்லாததுபோல்,
நடுக்கமோ நடுக்கம்,
ஏனோ என் உடல் அதிர்வை
சமாளிக்க சங்கடப் படுகிறது.
உதறலோ உதறல்,
ரவி என்னையே உற்றுப்
பார்கிறான்.
டம்ப்ளரை தலைகீழ்
கவுழ்த்தி, சுட்டு விரலை
மேல்வைத்து, அழுத்திகொண்டே,
சாய் என்னோடு பேசுவாயா?
என்றேன்.
உடல் கொஞ்சம்
உலுக்கி விட்டு,
தானாக டம்பளர்
என் விரலையும் இழுத்துகொண்டே
சென்றது.
கொஞ்சம் நகர்ந்து நகர்ந்து
சரியிடம் சென்று நின்றது.
இப்போது மகிழ்ச்சியைவிட
பயமே மேலோங்கி
இருந்த வேலையில்,
விளக்கு அனைந்தது,
அடுத்த வினாடி,
டமார் என்று சத்தம்,
பயந்த நான் எகுறி எழுதேன்,
தவறி விளக்கில் கால் வைத்து,
ரவியின் மேல் வழுக்கி விழுந்து,
பயத்தில் இருக்க கரம் பற்றினேன்.
ஆ! ஆ! என்று அலற
ஆரம்பித்த ரவி, பேசத் தொடங்கினான்.
நான் தான் பேசுகிறேன்,
என்றான்.
யார் நீ என்றேன்?.
உன் முன்னால் காதலன்
என்று சாயின் குரலில்
கூறினான்.
கோபம் கொப்பளித்த நான்,
சாய் இன்று வரை, உன்னையே
காதலிக்கிறேன், உன் நினைவிலே
வாழ்கிறேன் என்றேன்.
மௌனமே பதில்.
இன்னும் நம்பவில்லையா? என்று
சாயை இருக்கத் தழுவினேன்.
சாயும் பழைய நினைவுகளை,
ஒன்றன் பின், ஒன்றாக நினைவு கூர்ந்தான்.
நெகிழ்ச்சியில் கொஞ்சம் திழைதிருந்தோம்.
கண்ணீர் மழ்க, மழ்க
என் வாழ்வில் உன்னைத் தவிர,
வேறு யாரையும் காதலிக்க
மாட்டேன் என்றேன்.
நானும் நெடு நாட்களாக உன்னையே,
உன்னை மட்டுமே காதலிக்கிறேன்
என்றான்.
ஆனால் இந்த முறை ரவியின் குரலில்..........!
